கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத் தொகைக்காக விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000/- அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
நேற்று முதல் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் குறிப்பிடப்பட்டு விண்ணப்பதாரரின் கைப்பேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.
அதே போல கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில் உங்கள் பெயர் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்வதற்காக தமிழக அரசு புதிய இணையதளம் ஒன்றை தொடங்க உள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள https://kmut.tn.gov.in என்ற இணையதளத்தில் பொதுமக்கள் தாங்களாகவே தெரிந்துகொள்ளலாம்.
அதற்கு முதலில் தங்கள் ஆதார் எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும். பின்னர் ஆதாரில் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு வரும் ஓ.டி.பி.யை வைத்து என்ன காரணதிற்காக பணம் வரவில்லை என பொதுமக்களே தெரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இத்திட்டம் குறித்த செயல்பாடுகள் தொடர்பாக தகவல்கள் வழங்கிடவும், பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகள் இருப்பின் உதவி மைய அலுவலர்கள் மூலம் தகுந்த நடவடிக்கை எடுத்து குறைகளைக் களைந்திடவும், அனைத்து கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் உதவி மைய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் எனவே இந்த திட்டம் தொடர்பாக வேறு ஏதாவது உங்களுக்கு சிக்கல்கள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் நேரடியாக கோட்டாட்சியர் அலுவலகம் சென்று சரி செய்து கொள்ளலாம்.