
கட்டணமில்லா கனரக வாகன ஓட்டுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க போக்குவரத்துத் துறை அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சாலை போக்குவரத்து நிறுவனம், தமிழக அரசின் திறன் மேம்பாட்டுக் கழகம் இணைந்து நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கட்டணமில்லாமல் இருபாலருக்கும், கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி அளித்து, ஓட்டுநர் உரிமம் இலவசமாக பெற்று வழங்க இருக்கின்றன.
அதன்படி கும்மிடிப்பூண்டி, விழுப்புரம், வேலூர், திருச்சி, குடும்பகோணம், காரைக்குடி, புதுக்கோட்டை, சேலம், தருமபுரி, பொள்ளாச்சி, ஈரோடு, திருநெல்வேலி, நாகர்கோவில், மதுரை, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய 16 மையங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் சேர 20 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். இலகுரக வாகன உரிமம் பெற்று ஓராண்டு நிறைவடைந்திருக்க வேண்டும். பிஎஸ்வி பேட்ஜ் எடுத்திருக்க வேண்டும்.
ஆர்டிஓ விதிகள்படி உடல் தகுதி இருக்க வேண்டும். இந்த தகுதியும் விருப்பமும் இருப்போர், செல்போன் அல்லது இ சேவை மையம் மூலமாக https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/ என்ற இணையதள முகவரியில் Automotive என்ற பிரிவை தேர்ந்தெடுத்து வர்த்தக வாகன ஓட்டுநர் பயிற்சி நிலை IV என்ற பாடத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். இதில் அருகில் உள்ள மையத்தை தேர்ந்தெடுத்து ஆதார் எண் மூலம் தகவல்களை பகிர்ந்து விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.