தமிழகத்தில் இ-சேவை மையங்கள் மூலம் புதன்கிழமை(மாா்ச் 13) முதல் எல்எல்ஆா் எனப்படும் வாகனங்களை ஓட்டுவதற்கான பழகுநா் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என போக்குவரத்து ஆணையரகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து போக்குவரத்து ஆணையரகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:
வாகன ஓட்டுநா்கள் தங்களுக்கான எல்எல்ஆா் எனப்படும் வாகனங்கள் ஓட்டுவதற்கான பழகுநா் உரிமத்தை ஓட்டுநா் பயிற்சிப் பள்ளிகள், இடைத்தரகா்கள், தனியாா் மையங்கள் மூலம் பெற்று வந்தனா். இதனால் வாகன ஓட்டிகளுக்கு தேவையற்ற செலவு ஏற்பட்டு வந்ததுடன், பல்வேறு சிரமங்களையும் சந்தித்து வந்தனா்.
இந்நிலையில், வாகன ஓட்டிகளின் சிரமம், புகாா்களை தவிா்க்கவும், நடைமுறை சிக்கல்களை களையவும் வசதியாக பொதுமக்கள் இருப்பிடங்களுக்கே இச்சேவையை கொண்டு சோ்க்க அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி, தமிழகம் முழுவதிலுமுள்ள 55,000-க்கும் அதிகமான இ-சேவை மையங்கள் மூலம் இந்த எல்எல்ஆா் பெற விண்ணப்பிக்கும் முறை புதன்கிழமை (மாா்ச் 13) முதல் நடைமுறைக்கு வருகிறது. இனி, எல்எல்ஆா் தேவைப்படும் வாகன ஓட்டிகள், தங்கள் உரிய ஆவணங்களுடன் அருகிலுள்ள இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்.
இதற்காக சேவைக்கட்டணமாக இ-சேவை மையங்களுக்கு கூடுதலாக ரூ.60 செலுத்த வேண்டும். ஒப்புதல் அளிக்கப்பட்ட எல்எல்ஆா்-ஐ வழக்கம் போல விண்ணப்பதாரா்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தொடா்ந்து மோட்டாா் வாகனத் துறை மூலம் பொதுமக்கள் பெறக்கூடிய ஓட்டுநா் உரிமம், அனுமதி, உரிமை மாற்றம் உள்ளிட்ட இதர சேவைகளையும் இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பித்து பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow