பஜாஜ் நிறுவனம் உலகின் முதல் சிஎன்ஜி பைக்கை இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக் ரூ95 ஆயிரம் என்ற ஆரம்ப விலையில் அறிமுகமாகியுள்ளது. ஒரே நேரத்தில் சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் என மாற்றி மாற்றி எரிபொருளை பயன்படுத்தி இந்த பைக்கை இயக்கலாம். இந்த பைக்கை இயக்க ஒரு கி.மீக்கு ஒரு ரூபாய் தான் எரிபொருள் செலவாகிறது. இந்த பைக்கில் வேறு என்ன அம்ஙசகள் எல்லாம் உள்ளன? எத்தனை வேரியன்கள் உள்ளது என்ற விரிவான விபரங்களை இங்கே காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகமாக இருப்பதால் இந்திய மக்கள் பலர் எரிபொருள் செலவு அதிகமாக செய்து வருகிறார்கள். இந்தியாவில் உள்ள மாசு கட்டுப்பாட்டு விதிகளுக்கு இணங்க அதிக மைலேஜ் தரும் பைக்குகளை வடிவமைப்பதும் கடினம். இதன் காரணமாக வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மக்களுக்கு லாபம் தரும் வாகனங்களை உருவாக்குவதில் தீவிரமாக முயற்சி செய்து வந்தன. அதன் ஒரு பலனாய் தற்போது பஜாஜ் நிறுவனம் சிஎன்ஜியில் இயங்கும் பைக்கை உருவாக்கியுள்ளது.
பொதுவாக பைக்குகள் என்றால் பெட்ரோலில் மட்டும் தான் இயங்கும். சிஎன்ஜியில் இயங்கும் கார்கள் தான் அதிகமாக விற்பனையாகி வந்தன. சிஎன்ஜி என்றால் கார்களில் மட்டுமே சிஎன்ஜி என்பதை நாம் கேள்விபட்டிருப்போம் அதை ஏன் பைக்குகளில் பொருத்தக்கூடாது என யோசித்த பஜாஜ் நிறுவனம் உலகின் முதல் சிஎன்ஜி பைக்கை இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
பஜாஜ் நிறுவனம் புனேவில் இந்த நிகழ்வை நடத்தியது. இதில் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி கலந்து கொண்டு பேசினார். அப்பொழுது அவர் மாற்று எரிசக்தி கொண்டா வாகனங்களின் தேவை குறித்தும் எதிர்காலத்தில் பெட்ரோல் இறக்குமதிகளை குறைக்க இப்படியான வாகனங்கள் தேவை எனவும் இது போன்ற தயாரிப்புகளுக்கு உலகம் முழுவதும் வரவேற்பு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஜாஜ் நிறுவனம் இந்த நிகழ்ச்சியில் ஃப்ரீடம் என்ற உலகின் முதல் டூவீலரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் நீளமான சீட்டுகள், நீடித்து உழைக்கும் தரமான ஃபிரேம், பின்பக்கம் மோனோ ஷாக் சஸ்பென்ஷன், சிறப்பான ஸ்டைலிங் மற்றும் நவீன தொழிற்நுட்ப பேக்கேஜிங் கொண்டு இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த பைக்கின் வடிவமைப்பை பொறுத்தவரை முன் பக்கம் ரக்கடான லுக் இருக்கிறது. இதுபோக எல்இடி ஹெட் லைட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. டூயல் கலருடன் இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதே நேரம் இந்த பைக் ஏராளமான கலர் ஆப்ஷன்களிலும் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த பைக்கின் லுக் சாதாரணமாக இல்லாமல் சிறப்பான தோற்றத்தில் இருக்கிறது.
இந்த பைக்கில் 125 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. சீட்டுக்கு அடியிலேயே சிஎன்ஜி டேங்க் வழங்கப்பட்டுள்ளன. சிஎன்ஜி டேங்கை பொருத்தவரை 2கிலோ வரை சிஎன்ஜி ஏற்றுக்கொள்ளும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக பெட்ரோல் டேங்க்கும் வழங்கப்பட்டுள்ளது. பெட்ரோல் டேங்க்கும் 2லிட்டர் பெட்ரோல் வரை நிரப்பிக் கொள்ளும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆகியவற்றை பயன்படுத்தி இந்த பைக் முழு எரிபொருளில் 330கிலோமீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த பைக்கில் உள்ள 125 சிசி இன்ஜினை பொறுத்த வரை 9.5 பிஎஸ் பவரையும் 9.77 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சாதாரண பைக்குகள் போலவே இந்த பைக்கும் நல்ல பவர்ஃபுல்லான பைக்குகளாகவே உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் பின்பக்கம் லிங்க்டு மோனோஷாக் சஸ்பென்ஷன் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பைக்கின் பாதுகாப்பிற்காக பஜாஜ் நிறுவனம் 11 விதமான சோதனைகள் செய்தது. இந்த 11 விதமான சோதனைகளிலும் இந்த பைக் வெற்றிகரமாக கடந்தது. இந்த சோதனைகளில் இந்த பைக் விபத்தில் சிக்கினால் சிஎன்ஜி டேங்க் வெடிக்கும் அபாயம் இருக்கிறதா அல்லது சிஎன்ஜி எரிபொருள் லீக் ஆகும் அபாயம் இருக்கிறதா பல்வேறு விதமான சோதனைகள் செய்யப்பட்டன. அத்தனை சோதனைகளிலும் இந்த விதமான பிரச்சினையும் இல்லாமல் சிஐஜி டேங்க் சிறப்பாக செயல்பட்டுள்ளது.
பஜாஜ் நிறுவனம் இந்த பைக்கில் சிஎன்ஜி டேங்கே சீட்டுக்கு அடியில் வைத்துள்ளதால் சீட்டை நீளமாக ஒரே சீட்டாக வழங்கியுள்ளது. இதன் மூலம் சீட்டுக்கு அடியில் பத்திரமாக சிஎன்ஜி டேங்க் இருக்கும் என்ற வடிவமைப்பை இது உறுதி செய்துள்ளது. இந்த பைக்கை பயன்படுத்துவதன் மூலம் பெட்ரோல் பைக்கை பயன்படுத்துவதை விட 50 சதவீதம் குறைவான விலையில் இந்த பைக்கை பயன்படுத்த முடியும் என பஜாஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த பைக்கை ஒருவர் ஐந்து ஆண்டுகள் பயன்படுத்தும்போது அவருக்கு ரூபாய் 75,000 வரை சேமிக்க வாய்ப்பு இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பைக்கில் ஏற்கனவே நீளமான சீட்டு இருப்பது நமக்கு தெரியும். பைக் ஓடிக் கொண்டிருக்கும் போதே பெட்ரோலுக்கும் சிஎன்ஜிக்கும் மாற்றிக் கொள்ளும் ஸ்விட்ச் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக பெட்ரோல் நிரப்புவதற்கும் சிஎன்ஜி நிரப்புவதற்கும் ஒரே இடத்தில் தான் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது.
இதுபோக இந்த பைக்கின் எல்சிடி கண்ட்ரோல் மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இதில் ப்ளூடூத் கனெக்டிவ் கனெக்டிவிட்டி ஆப்ஷன் இருக்கிறது. இதன் மூலம் உங்கள் செல்போனை நீங்கள் பைக் உடன் கனெக்ட் செய்து கொள்ள முடியும். இந்த பைக் மொத்தம் மூன்று விதமான வேரியண்ட்களில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது.
அதன்படி ஃபிரீடம்125 என்ஜி 04 டிஸ்க் எல்இடி, ஃப்ரீடம்125 என்ஜி 04 டிரம் எல்இடி, ஃப்ரீடம்125 டிரம் ஆகிய வேரியண்ட்கள் அறிமுகமாகியுள்ளன. இதன் பெயரிலேயே நமக்கு இந்த பைக்கில் என்ன வித்தியாசம் இருக்கப்போகிறது என்ற தகவல் தெரியும். எல்இடி என்ற பெயர் கொண்ட வேரியண்ட் எல்லாம் எல்இடி ஹெட்லைட் கொண்டதாகவும் டிஸ்க், டிரம் என்ற பெயர் கொண்ட வேரியண்ட் எல்லாம் டிஸ்க் மற்றும் டிரம் பிரேக் கொண்ட வேரியண்ட்களாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த பைக் மொத்தம் 5 விதமான கலர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த பைக்கின் விலையை பொறுத்த வரை டாப் வேரியன்ட் ரூபாய் 1.10 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இதில் டிஸ்க் மற்றும் எல்இடி ஆகிய இரண்டு ஆப்ஷன்களும் இடம்பெறும். அடுத்ததாக மிட்-வேரியண்டான டிரம் மற்றும் எல்இடி ஆகிய இரண்டு ஆப்ஷன்களும் கொண்ட வேரியன்ட் ரூபாய் 1.05 லட்சம் என்ற விலையில் அறிமுகமாகி உள்ளது.
இருப்பதிலேயே குறைவாக பேஸ் வேரியண்டான டிரம் பிரேக் மட்டும் உள்ள வேரியண்ட் ரூபாய் 95000 என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. நாம் அனைவரும் எதிர்பார்த்தபடி ரூபாய் ஒரு லட்சத்திற்கும் குறைவான விலையில் தான் இந்த பைக் அறிமுகமாகியுள்ளது. இந்த பைக் முதல் கட்டமாக மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் அடுத்த மூன்று மாதத்திற்குள் படிப்படியாக ஒவ்வொரு மாநிலமாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த பைக்கில் 2 லிட்டர் பெட்ரோல் போட ரூ200 செலவாகும். இது போக 2 லிட்டர் சிஎன்ஜிக்கு ரூ174 செலவாகும் சொத்தம் ரூ374 எரிபொருள் செலவில் 330 கி.மீ பயணிக்கலாம். சுமார் ஒரு கி.மீ பயணிக்க ரூ1.13 தான் செலவாகிறது. இதை விட வேறு என்ன வேண்டும்? இந்த பைக் குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்.
மிகவும் அருமையான திட்டம் உடனடியாக செயல்படுத்துங்கள் நானும் ஒரு பைக் எடுக்கிறேன் எனக்கும் ஒரு பைக் வேண்டும் ஆனால் நான் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளேன் யாராவது எனக்கு ஒரு பைக் எடுத்து தர முடியுமா