மத்திய அரசின் சார்பாக ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் இறையாண்மை தங்கப் பத்திரங்களின் (SGB 2023-24 தொடர் II) இரண்டாவது தவணை, திங்கள் (செப்டம்பர் 11) மற்றும் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 15) இடையே பொதுச் சந்தாவிற்குத் திறக்கப்படும்.
இந்த சந்தா காலத்தில் தங்கப் பத்திரங்களின் வெளியீட்டு விலை ஒரு கிராமுக்கு ரூ.5,923 ஆக இருக்கும்.
இது குறித்து நிதி அமைச்சகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “இந்திய ரிசர்வ் வங்கியுடன் கலந்தாலோசித்து, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முதலீட்டாளர்களுக்கு வெளியீட்டு விலையில் இருந்து கிராமுக்கு ரூ. 50 தள்ளுபடி செய்யப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறையாண்மை தங்கப் பத்திரங்கள் என்றால் என்ன?
இந்த இறையாண்மை தங்கப் பத்திரங்கள் என்பது தங்கத்தில் குறிப்பிடப்படும் அரசுப் பத்திரங்கள் ஆகும். இதில், முதலீட்டாளர்கள் வெளியீட்டு விலையை ரொக்கமாக செலுத்த வேண்டும்.
பத்திரங்கள் முதிர்வின் போது பணமாக மீட்டெடுக்கப்படும். இவைகள் மத்திய அரசின் சார்பாக ரிசர்வ் வங்கியால் வழங்கப்படுகின்றன.
முக்கிய அம்சங்கள் என்ன?
தகுதி: இந்திய குடியுரிமை கொண்ட தனிநபர்கள், இந்து கூட்டுக்குடும்பம், பல்கலைக்கழகங்கள், தொண்டு நிறுவனங்கள் இதில் முதலீடு செய்யலாம். ஒரு கிராம் அடிப்படையில் பத்திரங்கள் வெளியிடப்படும்.
காலம்: 5 முதல் 8 ஆண்டுகள் வரை சேமிப்பு காலம் உள்ளது. குறிப்பிட்ட விதிகளுக்கு ஏற்ப முன்கூட்டியே சேமிப்பை எடுத்துக் கொள்ளலாம். ஒருவர் ஒரு கிராம் முதல் 4 கிலோ வரை தங்கம் வாங்கிக் கொள்ளலாம்.
வட்டி : இந்தத் திட்டத்தில் அரசு 2.5 சதவீதம் வட்டி வழங்கப்படும். மேலும் இந்தத் திட்டத்தில் கடனும் வாங்கிக் கொள்ளலாம்.
விண்ணப்பிப்பது எப்படி?
- எஸ்.பி.ஐ நெட் பேங்கிங் மூலம் இறையாண்மை தங்கப் பத்திரங்களை ஆன்லைனில் வாங்குவது பற்றி பார்க்கலாம்.
- எஸ்.பி.ஐ நெட் பேங்க்கிங்கில் (SBI Net Bankig) உள்நுழைக
- பிரதான மெனுவிலிருந்து ‘இ-சேவை’ என்பதைக் கிளிக் செய்யவும்
- “இறையாண்மை தங்கப் பத்திரத் திட்டம்’ என்பதைக் கிளிக் செய்யவும்
- நீங்கள் முதல் முறை முதலீட்டாளராக இருந்தால் பதிவு செய்ய வேண்டும். தலைப்புத் தாவலில் இருந்து ‘பதிவு’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும், பின்னர் ‘விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்’, பின்னர் ‘தொடரவும்.’
- தானாக நிரப்பப்படாத அனைத்து விவரங்களையும் உள்ளிடவும். நாமினி மற்றும் பிற விவரங்களைச் சேர்க்கவும்.
- டிமேட் கணக்கு வைத்திருக்கும் NSDL அல்லது CDSL இலிருந்து டெபாசிட்டரி பங்கேற்பாளரை தேர்வு செய்யவும்.
- டிபி ஐடி, கிளையண்ட் ஐடியை உள்ளிட்டு ‘சமர்ப்பி’ தாவலைக் கிளிக் செய்யவும்.
- விவரங்களை உறுதிசெய்து, ‘சமர்ப்பி’ தாவலைக் கிளிக் செய்யவும்