தமிழக அரசுப் பணிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்பும் வகையில் போட்டித் தேர்வுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தி வருகிறது. ஆண்டுதோறும் 35க்கும் மேற்பட்ட தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம். இதன்மூலம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். இந்த சூழலில் கொரோனா நெருக்கடி காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக திட்டமிட்டபடி தேர்வுகள் நடத்தப்படவில்லை.
அடுத்த மாதம் வெளியாகிறது:
இந்த சூழலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பல்வேறு தேர்வுகளுக்கான தேதிகள் அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 4 ஆகிய தேர்வுகள் குறித்த அறிவிப்பாணை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதிய முறை அறிமுகம் செய்யப்படும் என்று தெரியவந்துள்ளது.
தமிழுக்கு முக்கியத்துவம்:
இந்த முறை அமலுக்கு வந்தால் அனைத்து தேர்வுகளுக்கும் தமிழ் மொழித்தாள் தேர்வு நடத்தப்படும். தமிழ் மொழித்தாளில் 45 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ் வழியில் படித்த அரசுப் பள்ளி மாணவர்கள் பெரும்பாலானோர் வேலைவாய்ப்பை பெறும் சூழல் ஏற்படும் என்று நம்பப்படுகிறது.
TNPSC கூட்டத்தில் முடிவு:
அடுத்தகட்டமாக போட்டித் தேர்வுகள் நடத்துவது பற்றி அறிவிப்பு வெளியாகும் போது, புதிய முறையை எவ்வாறு அமல்படுத்துவது என்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக தமிழகத்தில் அரசுத்துறை, மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழி பாடத்தாள் கட்டாயமாக்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.
இதனை நிறைவேற்றும் வகையில் டி.என்.பி.எஸ்.சி உறுப்பினர்கள் சமீபத்தில் கூடி ஆலோசனை நடத்தினர். அதில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதிய முறையை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.