துணை கலெக்டர் 16, டிஎஸ்பி 23, வணிக வரிகள் உதவி கமிஷனர் 14, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் 21, ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் 14, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி 1, தீயணைப்பு அதிகாரி 1 என மொத்தம் 90 காலி பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவு வெளியாகி உள்ளது.
இதில், சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 49 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி என்று சுருக்கமாக அழைக்கப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-1 பதவியில் அடங்கிய துணை கலெக்டர் 16, துணை காவல் கண்காணிப்பாளர் 23, வணிக வரிகள் உதவி கமிஷனர் 14, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் 21, ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் 14, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி 1, தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் மாவட்ட அதிகாரி 1 என மொத்தம் 90 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை கடந்த மார்ச் மாதம் 28-ந்தேதி வெளியிட்டது.
இதற்கான முதல்நிலை தேர்வு கடந்த ஜூலை மாதம் 13-ம் தேதி நடைபெற்றது. 90 பணியிடங்களுக்கான இந்த முதல் நிலை தேர்வினை 1 லட்சத்து 59 ஆயிரத்து 973 பேர் எழுதியிருந்தார்கள். இந்த தேர்வு முடிவினை 50 நாட்களில் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதில் தற்காலிகமாக 1907 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மனிதநேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகத்தில் படித்த 18 மாணவிகள், 31 மாணவர்கள் என 49 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 1 முதல்நிலை எழுத்து தேர்வு தேர்ச்சி பெற்ற 1907 பேரும் தேர்ச்சி அடைந்தவர்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் நடத்தி வரும் இ-சேவை மையங்கள் வாயிலாக ஆவணங்களை வருகிற 6-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். முதன்மை தேர்வு வருகிற டிசம்பர் மாதம் 10-ந்தேதி முதல் 13-ந் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளது. இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்கள், அடுத்தக்கட்டமாக நேர்முக தேர்வில் பங்கேற்க அழைக்கப்படுவார்கள்.
இந்த மூன்று தேர்வுகளிலும் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் பணிகள் ஒதுக்கப்படும். துணை கலெக்டர், டிஎஸ்பி என மதிப்பெண்களை பொறுத்து பணிகள் மாறிக்கொண்டே இருக்கும். மிக அதிகமான மதிப்பெண் எடுத்த 16 பேருக்கு துணை கலெக்டர் பதவியும், அடுத்தாக மிக அதிக மதிப்பெண்ணுடன் உடற்தகுதி தேர்வில் வென்ற 23 பேருக்கு டிஎஸ்பி பதவி கிடைக்கும். வணிக வரிகள் உதவி கமிஷனர் 14, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் 21, ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் 14, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி 1, தீயணைப்பு அதிகாரி 1 பணியிடங்களும் மதிப்பெண் அடிப்படையில் கிடைக்கும்.
இதனிடையே சைதை துரைசாமி வெளியிட்ட அறிவிப்பில், டிஎன்பிஎஸ்சி குரூப்1 முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்ற மனிதநேய மையத்தில் படித்த மாணவர்கள் மட்டுமின்றி, முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற இதர மாணவர்களும் மனிதநேய மையத்தில் முதன்மை தேர்வுக்கான பயிற்சிக்கு பதிவு செய்யலாம். அவர்களுக்கு ஊக்கத்தொகையுடன் கூடிய பயிற்சி வழங்கப்படும். முதல்நிலை தேர்வில் வெற்றிபெற்ற மனிதநேய மாணவர்கள் மற்றும் இதர மாணவர்கள் தொலைபேசி மூலமாக 044–24358373, 24330095, 9840439393 என்ற எண்களில் தொடர்புக் கொள்ளலாம். மேலும் www.mntfreeias.com என்ற இணையதளத்திலும் பதிவு செய்யலாம் என்று சைதை துரைசாமி கூறியுள்ளார்.