”அரசு போக்குவரத்துக் கழகங்களில் காலிப் பணியிடங்கள் இனி, டி.என்.பி.எஸ்.சி., வாயிலாகத் தான் நிரப்பப்படும்,” என, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார்.சென்னையில் நேற்று, அடையாறு, திருவான்மியூர் பணிமனைகளில் ஆய்வு செய்த பின், மூன்று மாதங்களுக்கு மேல் பணிக்கு வராத ஊழியர்களிடம், அவர் பேசியதாவது:சாதாரண கட்டண பஸ்களில், மகளிருக்கு இலவச பயணம் அனுமதிக்கப்பட்டுள்ளதால், ஏழை பெண்கள் வேலைக்கு செல்லவும், வியாபாரம் செய்யவும் உதவியாக உள்ளது.
அவர்களுக்கான கட்டணத்தை, அரசு செலுத்துகிறது. எனவே, அவர்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டியது, ஓட்டுனர், நடத்துனர்களின் கடமை.போக்குவரத்துக் கழகங்கள், 48 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்குகின்றன. ஆனாலும், அனைத்து பஸ்களையும் இயக்கி, பொது மக்களுக்கு உதவ வேண்டும். இனி, அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கான பணியிடங்கள், அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., வாயிலாகவே நிரப்பப்படும்.
அதனால், தனிப்பட்ட நபருக்கு வேலை அளிப்பது சாத்தியமில்லை. இந்நிலையில், ஏற்கனவே பணியில் இருப்போர் வேலையை சிறப்பாக செய்து, அவர்களின் குடும்பத்துக்கும், போக்குவரத்துக் கழகங்களுக்கும் சிறப்பு சேர்க்க வேண்டும்.நீண்ட நாட்கள் பணிக்கு வராதோர் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதே வழக்கம். ஆனால், நான் உங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறேன்; அதை உணர்ந்து பணியாற்றுங்கள்.இவ்வாறு அவர் கூறினார்.