முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் என்னென்ன என்பதையும் தமிழக அரசு விவரித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழகஅரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ம்தேதி சுதந்திர தினவிழா உரையில்,”பொதுப் பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக 1,000 முதல்வர்மருந்தகங்கள் தொடங்கப்படும்” என்று அறிவித்தார்.
இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்துவது தொடர்பாக கடந்த அக். 29-ம்தேதி முதல்வர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர் மருந்தகங்கள் அமைக்க மேற்கொள்ளப்பட்ட பணிகள், மாவட்ட மருந்து சேமிப்புக் கிடங்குகள் அமைத்தல் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து கூட்டுறவுத்துறை மற்றும்தமிழ்நாடு மருத்துவ சேவைக்கழகம் ஆகியோருக்கு உரிய அறிவுரைகளை முதல்வர் வழங்கினார்.
முதல்வர் மருந்தகத்துக்கு தேவையான பொதுப் பெயர் (ஜெனரிக்) மருந்துகள் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும். மருத்துவம் சார்ந்த இதர மருத்துவ உபகரணங்கள், சித்தா, ஆயுர்வேதம், இம்காப்ஸ், டாம்கால் மற்றும் யுனானி மருந்துகள், சர்ஜிக்கல்ஸ் மற்றும் நியூட்ராசூட்டிக்கல்ஸ் உள்ளிட்ட மருந்து வகைகள் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும்.
தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள B-Pharm / D.Pharm சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் கூட்டுறவுத்துறை மூலம் www.mudhalvarmarunthagam.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம் செய்யும் வழிமுறைகள், தேவையான ஆவணங்கள் மற்றும் திட்ட விவரங்கள் மேற்படி இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளன. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தேவையான பயிற்சிகள் வழங்கவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டம் மூலம் முதல்வர் மருந்தகங்கள் உருவாக்கப்பட்டு, வரும் 2025 ஜனவரி மாதம் முதல் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த மருந்தகம் அமைக்க மேலே கொடுக்கப்பட்டுள்ள இணையத்தில் விண்ணப்பிக்க நவம்பர் 20 -ஆம் தேதி கடைசி நாளாகும். இந்த மருந்தகத்தை அமைக்க என்னென்ன தகுதிகள் என்பதை பார்க்கலாம்.
- 110 சதுர அடி இடம் தேவை
- சொந்த இடத்திற்கு சொத்து வரி, குடிநீர், மின் இணைப்பு ரசீது வேண்டும்
- வாடகை இடத்திற்கு வாடகை ஒப்பந்தம் சமர்ப்பிக்க வேண்டும்
- மருந்தகம் அமைக்க ரூ 3 லட்சம் (ரொக்கமாக மற்றும் மருந்துகளாக) வழங்கப்படும்
- TABCEDCO, TAHDCO மற்றும் TAMCO பயனாளிகளும் விண்ணப்பிக்கலாம்
- தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு ரூ 1.50 லட்சம் மதிப்பில் மருந்துகளாக மானியம் வழங்கப்படும்.
அது போல் சர்க்கரை நோயாளிகளின் பாதங்களை காக்க பாதம் பாதுகாப்போம் திட்டம் தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்படுவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் 10 கோடிக்கும் அதிகமானோர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் 25 சதவீதம் பேர் பாதம் தொடர்பான பாதிப்புகளால் அவதிப்படுவதும், அவர்களில் 85 சதவீதம் பேர் கால்களை இழக்க நேரிடுவதும் தேசிய பேரிடர் ஆகும். தமிழகத்தில் 80 லட்சம் பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்க்கரை நோயால் ஏற்படும் பாத பாதிப்புகளை ஆரம்ப நிலையில் கண்டறியாவிட்டால், ஆபத்தான பின்விளைவுகளும், கிருமி தொற்று மற்றும் கால்களை இழக்கும் அபாயமும் ஏற்படுகிறது. முன்கூட்டியே கண்டறிந்தால் 85 சதவீத கால் அகற்றத்தை தடுத்துவிட முடியும்.
இதை கருத்தில் கொண்டு, தமிழக அரசால் ‘பாதம் பாதுகாப்போம்’ திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. சர்க்கரை நோயால் கால் பாதங்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்கவும், கால் அகற்றப்படுவதை தடுக்கவும் ‘பாதம் பாதுகாப்போம் திட்டம்’ முக்கிய பங்கு வகிக்கிறது. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் இதை கட்டமைத்து, நாட்டிலேயே முதல்முறையாக, 36 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மூலம் ஒருங்கிணைந்த பாத மருத்துவ சேவைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இத்திட்டத்தை செயல்படுத்தியதில், இதுவரை 1.65 லட்சம் பேருக்கு பாத பாதிப்பு கண்டறிதல் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து, தற்போது தமிழகம் முழுவதும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. இதற்காக ரூ.26.62 கோடி நிதி ஒதுக்கீடு செய்து 2,336 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 299 அரசு மருத்துவமனைகள், 36 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் பாத பாதிப்பு கண்டறிதல் மையங்கள் நிறுவப்பட உள்ளன.
இதன்மூலம் 80 லட்சம் சர்க்கரை நோயாளிகளை பாத பரிசோதனைக்கு உட்படுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஏற்படும் பாத உணர்வு இழப்பு, ரத்த நாள அடைப்புகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.