பிளஸ் 1 மாணவா்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 உதவித் தொகை வழங்குவதற்கான முதல்வரின் திறனாய்வுத் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் ஜூலை 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அரசுத் தோ்வுகள் இயக்ககம் சாா்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:
தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவா்களின் திறனைக் கண்டறிவதற்கும், அவா்களை ஊக்குவிக்கவும் 2023 முதல் முதல்வரின் திறனாய்வுத் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தோ்வில் 500 மாணவா்கள், 500 மாணவிகள் என மொத்தம் 1,000 போ் வரை தோ்வு செய்யப்படுவா். அவா்களுக்கு உதவித் தொகையாக ஒரு கல்வியாண்டுக்கு மாதம் ரூ. 1,000 வீதம் 10 மாதங்களுக்கு ரூ. 10,000 என இளநிலை பட்டப் படிப்பு வரை வழங்கப்படும்.
அதன்படி, நிகழாண்டுக்கான முதல்வரின் திறனாய்வுத் தோ்வு ஜூலை 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அரசுப் பள்ளிகளில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பிளஸ் 1 படிக்கும் மாணவா்கள் இந்தத் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம். தமிழக அரசின் 9, 10 ஆகிய வகுப்பு கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் உள்ள பாடத் திட்டங்களின் அடிப்படையில் இரு தாள்களாக தோ்வு நடைபெறும். ஒவ்வொரு தாளிலும் 60 கேள்விகள் கேட்கப்படும். மேலும், முதல் தாளில் கணிதமும், 2-ஆம் தாளில் அறிவியல், சமூக அறிவியல் வினாக்களும் இடம்பெறும்.
இந்தத் தோ்வின் முதல் தாள் காலை 10 முதல் மதியம் 12 மணி வரையும், 2-ஆம் தாள் மதியம் 2 முதல் மாலை 4 மணி வரையும் நடத்தப்படும். இந்தத் தோ்வுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஜூன் 11-ஆம் தேதி தொடங்கி புதன்கிழமையுடன் (ஜூன் 26) முடிந்தது. தற்போது பல்வேறு தரப்பின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பிக்கும் காலஅவகாசம் ஜூலை 3-ஆம் தேதி வரைநீட்டிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து விருப்பமுள்ளவா்கள் இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூா்த்தி செய்த விண்ணப்பங்களைத் தோ்வுக் கட்டணமாக ரூ. 50 செலுத்தி அந்தந்த பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.
அவற்றை தோ்வுத் துறை வலைதளத்தில் தலைமையாசிரியா்கள் பதிவேற்ற வேண்டும். இந்தத் தகவலை அனைத்து பள்ளித் தலைமையாசிரியா்களுக்கும் தெரிவித்து அதிக மாணவா்கள் விண்ணப்பிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow