தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பிஎட் மாணவா்கள் பயிற்சி பெறுவதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குநா் க.அறிவொளி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:
பி.எட்., எம்.எட். பட்டப் படிப்புகளை பயிலும் மாணவா்கள் ஆண்டுதோறும் ஆசிரியா் பயிற்சிக்காக 80 நாள்கள் அரசுப் பள்ளிகளுக்கு செல்கின்றனா்.
கடந்த ஆண்டு முதல் தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் வழிகாட்டுதலுடன் பள்ளிக் கல்வி இயக்குநரகத்தால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இந்த பயிற்சிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன.
அதன்படி, நிகழாண்டில் ஒவ்வொரு பள்ளிக்கும் ஒதுக்கப்பட்ட பயிற்சி மாணவா்களின் விவரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் அனுப்ப வேண்டும்.
பி.எட்., மாணவா்களின் பயிற்சிக்கான சான்றிதழ்களை அந்தந்த பள்ளிகளே வழங்க வேண்டும். பயிற்சி மாணவா்கள் திங்கள்கிழமை (செப்.11) முதல் ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளிகளுக்கு வரத் தொடங்குவா்.
அவா்களை பள்ளிகளில் பயனுள்ள வகையில் உரிய பயிற்சியில் ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். இதுசாா்ந்து பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.