புதுச்சேரி-‘மரைன் கேட்டரிங் மற்றும் ஓட்டல் மேலாண்மை துறையை தேர்வு செய்து படித்தால், வல்லமையாக சம்பாதிக்க முடியும்’ என, துறைத் தலைவர் சுரேஷ்குமார் பேசினார்.புதுச்சேரியில் நடைபெறும் ‘தினமலர்’ வழிகாட்டி நிகழ்ச்சியில், மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரியின், மரைன் கேட்டரிங் மற்றும் ஓட்டல் மேலாண்மை துறைத் தலைவர் சுரேஷ்குமார் பேசியதாவது;அனைத்து படிப்பும் நல்ல படிப்புதான். கெடுதல் எதுவும் கிடையாது. வாழ்க்கையின் முன்னேற்றப் பாதைக்கு செல்ல சரியான வழியை பிடித்தால், முதலிடம் வருவீர்கள்.அன்றாம் சாப்பிடும் உணவே ஒரு படிப்பு தான். மரைன் கேட்டரிங், ஓட்டல் மேலாண்மை படித்தால், நல்ல வேலை உள்ளது. அதிகம் சம்பாதிக்க முடியும்.இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளுக்கும் சென்று பணியாற்றலாம்.
இந்த பாடப்பிரிவுகளை தேர்வு செய்து படித்தால், வல்லமையாக சம்பாதிக்க முடியும். இதற்கு பிளஸ் 2 படித்திருந்தால் போதுமானது.இந்த பாடத்தை தேர்வு செய்பவர்கள், அவசியம் ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால், உள்நாடு மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் கப்பல், ஓட்டல்களில் பணியாற்ற வேண்டியிருக்கும். அதற்கு ஆங்கிலம் பேசத் தெரிந்திருப்பது அவசியம்.கேட்டரிங் ஒரு படிப்பா என்று கருதக்கூடாது.
இதற்கு அழிவு கிடையாது. குறிப்பாக துறைமுகங்கள், கப்பல் தளங்கள், நட்சத்திர ஓட்டல்களில் ஏராளமான வேலை வாய்ப்புக்கள் காத்துக்கொண்டுள்ளன. இந்த படிப்பை முடித்து விட்டு, பணிக்கு சேர்ந்தால், எந்த செலவும் கிடையாது.கப்பல் எந்த நாட்டிற்கு செல்கிறதோ, அந்த நாட்டிற்கு நீங்களும் செல்லலாம். சம்பாதித்துக் கொண்டே உலகத்தையும் சுற்றிப் பார்க்கலாம்.
வாழ்க்கையில் முன்னேற இந்த படிப்பை கண்டிப்பாக தேர்வு செய்யலாம்.ஒவ்வொரு மாணவரும், கல்லுாரியை தேர்வு செய்வது மிக முக்கியமான ஒன்று. கல்லுாரியில் சேருவதற்கு முன்பாக, அதற்கான அங்கீகாரம் இருக்கிறதா, பயிற்சி கூடங்கள் உள்ளதா, நீச்சல் குளம், பயிற்சி அளிக்க கப்பல் வசதி உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு இருக்கும் கல்லூரிகளில் மட்டுமே சேர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.