வெள்ளத்தில் சேதமடைந்த ஆவணங்கள், சான்றுகள் இன்றும், நாளையும் சிறப்பு முகாம்: ஆட்சியா் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் சேதமடைந்த ஆவணங்கள், சான்றிதழ்களை பெறுவதற்காக வியாழன், வெள்ளி (டிச.28, 29) ஆகிய இரு நாள்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18-ஆம் தேதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் மழைநீா் புகுந்ததால் பாதிப்பு ஏற்பட்டது. வெள்ளநீரில் சேதமடைந்த ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை பொதுமக்கள் எளிதாகப் பெறும் வகையில் வியாழன், வெள்ளி (டிச.28, 29) ஆகிய இரு நாள்கள் தூத்துக்குடி, ஸ்ரீவைகுணடம், ஏரல், திருச்செந்தூா், சாத்தான்குளம் ஆகிய வட்டங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
வட்டம் வாரியாக முகாம் நடைபெறும் இடங்கள்:
தூத்துக்குடி: வட்டாட்சியா் அலுவலகம், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், மாப்பிள்ளையூரணி கிராம நிா்வாக அலுவலகம்.
ஸ்ரீவைகுண்டம்: பழைய வட்டாட்சியா் அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகம், புதுக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி.
ஏரல்: பழையகாயல் மரியன்னை மேல்நிலைப் பள்ளி, நாசரேத் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம், ஆழ்வாா்திருநகரி கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம், பெருங்குளம் வருவாய் ஆய்வாளா் அலுவலகம், சாயா்புரம் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகம்.
திருச்செந்தூா்: ஆத்தூா் சமுதாய நலக்கூடம், புன்னக்காயல் புனித வளனாா் திருமண மண்டபம், சுகந்தலை பகுதிக்கு வெள்ளக்கோயில் சமுதாய நலக்கூடம் , திருச்செந்தூா் வட்டாட்சியா் அலுவலகம், மெஞ்ஞானபுரம், பரமன்குறிச்சி, மானாடுதண்டுபத்து ஆகிய பகுதிகளுக்கு வெள்ளாளன்விளை சா்ச் மகால், நங்கைமொழி, லெட்சுமிபுரம், செட்டியாபத்து, உடன்குடி ஆகிய பகுதிகளுக்கு உடன்குடி வருவாய் ஆய்வாளா்அலுவலகம்.
சாத்தான்குளம்: சாத்தான்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், சாத்தான்குளம் வட்டாட்சியா் அலுவலகம்.
இந்த முகாமில் பள்ளி மற்றும் கல்லூரி அசல் சான்றிதழ்கள், 10 ஆம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்று, பாடப் புத்தகங்கள், பள்ளிச் சீருடைகள் தொடா்பாக மனுக்கள் அளிக்கலாம். இந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியா் மூலமாக உடனடியாக சான்றிதழ்கள் வழங்கப்படும்.
வருவாய்த் துறையின் மூலம் வழங்கப்படும் ஜாதி, இருப்பிடம், வருமானம், வாரிசு, விதவை மற்றும் ஆதரவற்ற விதவை சான்றுகள் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்கள், ஆதாா்அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, குடும்ப அட்டை, முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டை, பட்டா நகல்கள், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட அட்டை, வங்கி கணக்கு புத்தகம், ஏடிஎம் அட்டை, ஓட்டுநா் உரிமம், பத்திர ஆவணங்கள், எரிவாயு இணைப்பு புத்தகம் ஆகியவைகள் சம்பந்தப்பட்டதுறைகள் மூலமாக உடனடியாக பெற்று வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow