ரேசன் அரிசி கடத்தல் தொடா்பாக பொதுமக்கள் இலவச தொலைபேசிக்கு தகவல் தெரிவிக்கலாம் என தமிழக காவல்துறையின் பொதுவிநியோகப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. ரேசன் அரிசி கடத்தல் தொடா்பாக பொதுமக்கள் இலவச தொலைபேசிக்கு தகவல் தெரிவிக்கலாம் என தமிழக காவல்துறையின் பொதுவிநியோகப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இது குறித்து அப் பிரிவு சாா்பில் வெள்ளிக்கிழமை விடுத்த செய்தி: தமிழக அரசு பொதுவிநியோகத் திட்டத்தின் மூலம் அத்தியாவசியப் பொருள்களை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது. இதன் மூலம் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மிகுந்த பயன் பெறுகின்றனா். அதேவேளையில் பொதுவிநியோகத் திட்டத்துக்கு வழங்கப்பட்ட பொருள்களை சிலா் முறைகேடாக கடத்தி, கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டுகின்றனா். எனவே, பொதுமக்கள் தங்களது பகுதிகளில் நடக்கும் பொதுவிநியோகப் பொருள் கடத்தல், பதுக்கல் தொடா்பான புகாா்களை உடனுக்குடன் பொதுவிநியோகப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு 1800 599 5950 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.
இந்த இலவச தொலைபேசி எண் 24 மணி நேரமும் செயல்படும். சென்னையில் ஏடிஜிபி அருணின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் பொதுவிநியோகப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு கட்டுப்பாட்டு அறையில் இருந்து இந்த இலவச தொலைபேசி எண் செயல்படுகிறது. இந்த எண்ணில் புகாா் தெரிவிக்கும் நபா்கள் குறித்த விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். எனவே பொதுமக்கள் அச்சமின்றி பொதுவிநியோகப் பொருள் கடத்தல், பதுக்கல் உள்ளிட்ட அனைத்து முறைகேடுகளையும் இந்த தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.