பொறியியல் மற்றும் அறிவியல் பட்டதாரிகளுக்கு குறுகிய கால செமிகண்டக்டர் பயிற்சி அளிக்க சென்னை ஐஐடி பிரவார்டாக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் ஏற்பாடு செய்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை ஐஐடி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: சென்னை ஐஐடி பிரவார்டாக் டெக்னாலஜிஸ் ஃபவுண்டேஷனும் மத்திய கல்வி அமைச்சகத்தின் ஸ்வயம் பிளஸ்-சும் இணைந்து வேலைவாய்ப்புடன் கூடிய குறுகிய கால செமிகண்டக்டர் பயிற்சியை அளிக்க உள்ளன. இதில், பொறியியல், அறிவியல்பட்டதாரிகள், பொறியியல் டிப்ளமாதாரர்கள், எலெக்ட்ரானிக்ஸ் பின்புலம் கொண்ட பட்டதாரிகள் சேரலாம். தற்போது படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் சேர தகுதியுடையவர் ஆவர்.
இந்த பயிற்சிக்கான நேரடிவகுப்புகள் ஐஐடி வளாகத்தில் நடைபெறும். இதில் செமிகண்டக்டர் தொழில்குறித்து சொல்லித்தரப்படும். தொழில் நிறுவனங்களில் நேரடி பயிற்சியும் உண்டு. ஐஐடி வளாகத்திலேயே உணவு மற்றும் தங்கு வசதி உள்ளது.
வேலைவாய்ப்புக்கு ஏற்பாடு: இதற்கான ஒரு நாள் கட்டணம் ரூ.650. பயிற்சியை சிறப்பாக முடிப்போருக்கு வேலைவாய்ப்புக்கும் ஏற்பாடு செய்யப்படும். முதலாவது பயிற்சி நவம்பர் 9 முதல் 17-ம் தேதி வரையும்,2-வது பயிற்சி நவம்பர் 25 முதல் டிசம்பர் 3 வரையும் 3-வது பயிற்சிடிசம்பர் 9 முதல் 17-ம் தேதி வரையும் அடுத்தடுத்து நடைபெறும். இந்த பயிற்சியில் சேரவிரும்பவோர் https://iitmpravartak.org.in/cees_course என்ற இணைப்பை பயன்படுத்தி பதிவுசெய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு 94983 41969 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.