பெண்கள் சுயதொழில் தொடங்க ரூ.5 லட்சம் மானிய கடன்! விண்ணப்பிப்பது எப்படி?
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது, ‘லக்பதி தீதி’ (Lakhpati Didi) எனும் திட்டத்தின் பயனாளர்களின் எண்ணிக்கை இரண்டு கோடியிலிருந்து மூன்று கோடியாக உயர்த்தப்படும் என்று அறிவித்தார்.
மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் பெண்களுக்கு பல்வேறு தொழில் பயிற்சிகள் அளிக்கவும் அப்பெண்கள் ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் வரை நிலையான வருமானம் பெறுவதையும் நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதனை அறிவித்து பேசிய நிர்மலா சீதாராமன், “நாட்டில் 83 லட்சம் சுய உதவிக்குழுக்களில் உள்ள சுமார் 9 கோடி பெண்கள், அதிகாரமளித்தல் மற்றும் தற்சார்பு மூலமாக கிராமப்புற சமூக-பொருளாதாரத்தை மாற்றியமைத்து வருவதாக” குறிப்பிட்டார்.
2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தன்று ‘லக்பதி தீதி` எனும் இத்திட்டத்தை பிரதமர் நரேந்திர மோதி அறிவித்தார். பிளம்பிங் முதல் எல்.இ.டி. பல்புகளை செய்வது, ட்ரோன்களை இயக்குதல் வரை பல்வேறு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சிகளை இத்திட்டத்தின் வாயிலாக பெண்கள் பெற முடியும்.
இந்த திட்டம் தமிழ்நாட்டில் லட்சாதிபதி சகோதரி
எனும் பெயரில் செயல்படுத்தப்படுகிறது. மகளிர் சுய உதவிக்குழுக்களில் உள்ள பெண்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைவது எப்படி?
‘லக்பதி தீதி’ திட்டம் என்பது என்ன?
மகளிர் சுய உதவிக்குழுக்களில் உள்ள பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ. 1 லட்சம் வரை நிலையான வருமானம் பெறும் வகையில் பல்வேறு பயிற்சிகளை வழங்கும் திறன் மேம்பாட்டு திட்டம் தான் இந்த லக்பதி தீதி
.
இத்திட்டம் மூலம், எல்.இ.டி. பல்பு தயாரித்தல், ட்ரோன்களை இயக்குதல் மற்றும் அதனை பழுது பார்த்தல், பிளம்பிங் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. வேளாண் பணிகளில் தொழில்நுட்பத்தை புகுத்தும் நோக்கத்தில் சுய உதவிக்குழுக்களுக்கு ட்ரோன்கள் வழங்கப்படுவதும் இத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.
இதுதவிர, தொழில் தொடங்குவதற்கும் அதனை மேம்படுத்துவதற்கும் பல்வேறு நிதியுதவி மற்றும் கடனுதவிகளை பெறுவதற்கான வழிகாட்டுதல்களும் இதன்மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த திட்டம் தமிழ்நாட்டில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் மகளிர் திட்டத்தின்
கீழ் செயல்படுத்தப்படுகிறது.
என்ன பயன்கள் கிடைக்கும்? யாரெல்லாம் பயன் பெறலாம்?
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் இதனை விவரித்தார். அதன்படி,
முதலில் நீங்கள் மகளிர் சுய உதவிக்குழு ஒன்றில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும்.
வேளாண்மை, கால்நடை சார்ந்த தொழில்களிலோ, நகர்ப்புறமாக இருந்தால் மளிகைக்கடை, பெட்டிக்கடை போன்ற சிறுதொழில்களையோ மேற்கொண்டிருக்க வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் தொழில்முனைவோராக வேண்டும் என நினைப்பவர்களுக்கு நிதியுதவி, வங்கிக்கடன் பெறுவதற்கான வழிவகைகள் மேற்கொள்ளப்படும்.
மகளிர் சுய உதவிக்குழுவில் உள்ள பெண்கள் ஏதேனும் பொருளை உற்பத்தி செய்பவராக இருந்தால் அதற்கான உரிமமும் பெற்றுத்தரப்படும்.
தவிர்த்து, மேலே குறிப்பிட்டது போன்று பல்வேறு துறைகளில் குறைந்தது 10 நாட்கள் முதல் அதிகபட்சமாக 30 நாட்கள் வரை பயிற்சி அளிக்கப்படும்.
அதன்பின், தொழில் தொடங்குவதில் ஆர்வமுள்ள பெண்களுக்கு தொழில் முதலீட்டுக்காக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ரூ. 5 லட்சம் வரை மானியக் கடன் பெற வழிவகை செய்யப்படும். இதில், பயனாளிகள் குறைந்தது 10% முதலீட்டுத் தொகையை வைத்திருக்க வேண்டும்.
“தமிழ்நாட்டை பொறுத்தவரை இத்திட்டத்திற்காக 2 ஆண்டுகளுக்கு முன்பே கணக்கெடுப்பு நடத்தி பயனர்களை அடையாளம் கண்டுள்ளோம். தமிழ்நாட்டில் 9 லட்சம் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் பல்வேறு தொழில் பயிற்சிகள் அளிக்கப்படும். 5 லட்ச ரூபாய் வரை மானியக்கடன் வழங்குவதற்கான வழிவகை அவர்களுக்கு செய்துதரப்படும்” என அந்த அதிகாரி தெரிவித்தார்.
யாரை அணுக வேண்டும்?
சம்பந்தப்பட்ட ஊராட்சியில் சமுதாய வல்லுநர் என ஒருவர் இருப்பார் அல்லது ஊரக வாழ்வாதார இயக்கத்திலும் பணியாளர்கள் உள்ளனர். அவர்களிடம் இதுகுறித்த தகவல்களை கேட்டு தெளிவு பெறலாம். அங்கன்வாடி மையங்களுக்கு சென்றும் இதுகுறித்து அறியலாம்.
என்னென்ன ஆவணங்கள் வேண்டும்?
மகளிர் சுய உதவிக்குழுக்களில் உறுப்பினராக இருக்க வேண்டும் என்பதே அடிப்படை தகுதியாக உள்ளது. மற்ற அரசு திட்டங்களை போன்றே ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வருமான சான்றிதழ், வங்கி கணக்கு விவரங்கள் உள்ளிட்ட அடிப்படை ஆவணங்கள் இத்திட்டத்திற்கு போதுமானவை.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow