தமிழகத்தில், அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வி பயிலச் செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகையாக வழங்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப் பேரவையில் இன்று, 2022 – 23ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
பட்ஜெட் உரையில்,
அரசுப் பள்ளி மாணவிகளின் உயர்கல்வியை உறுதி செய்யும் வகையில், மூவலூர் ராமாமிர்தம் அம்மாள் பெயரில் வழங்கப்பட்டு வந்த திருமண நிதியுதவி மாற்றம் செய்யப்பட்டு, மூவலூர் ராமாமிர்தம் அம்மாள் உயர்கல்வி உறுதி திட்டமாக செயல்படுத்தப்படும்.
இந்த திட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வி பயிலச் செல்லும் போது, முதலாமாண்டு முதல் இறுதியாண்டு வரை ஒவ்வொரு மாதமும் அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக ரூ.1000 உதவித் தொகை வரவு வைக்கப்படும்
இந்த திட்டத்தின் கீழ் உயர்கல்வி பயிலும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
இது தவிர, ஈவேரா மணியம்மை அம்மாள் விதவை தாயின் மகள்களின் திருமண நிதியுதவி திட்டம், முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவித் திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதியுதவி திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவி திட்டங்கள் எவ்வித மாற்றமும் இன்றி செயல்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.
புனித ஜாா்ஜ் கோட்டையில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் முதல் முறையாக காகிதமில்லாத நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதிநிலை அறிக்கையை பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரையாற்றினார்.