ஜேஇஇ முதல்நிலை
தேர்வு முடிவுகள் வெளியீடு
ஐஐடி,
என்ஐடி போன்ற மத்திய
உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலைப்
படிப்புகளில் சேர,
ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வில் (JEE) தேர்ச்சிபெற வேண்டும். இவை JEE
முதல்நிலைத் தேர்வு, JEE
பிரதானத் தேர்வு என
2 கட்டங்களாக நடத்தப்படும். இதில்
முதல்நிலைத் தேர்வானது தேசிய
தேர்வு முகமை (NTA)
சார்பில் ஆண்டுக்கு 4 முறை
நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி,
நடப்பாண்டுக்கான முதல்
மற்றும் 2-ம் கட்டத்
தேர்வுகள் கடந்த பிப்ரவரி,
மார்ச் மாதங்களில் நடத்தப்பட்டு, முடிவுகள் வெளியிடப்பட்டன. அதன்
பின் ஏப்ரலில் நடைபெறவிருந்த 3-ம் கட்டத் தேர்வு
கரோனா பரவலால் ஒத்திவைக்கப்பட்டு, கடந்த ஜூலை
20 முதல் 27-ம் தேதி
வரை நடத்தப்பட்டது. இந்த
தேர்வை நாடுமுழுவதும் 915 மையங்களில் சுமார் 7 லட்சம் மாணவர்கள்
எழுதினர்.
இந்நிலையில், பிஇ, பிடெக் படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் https://jeemain.nta.nic.in/webinfo2021/Page/Page?PageId=1&LangId=P
என்ற
இணையதளத்தில் நேற்று
முன்தினம் இரவு வெளியிடப்பட்டன. இதில் 17 மாணவர்கள் 100 சதவீத
மதிப்பெண் பெற்று சாதனை
படைத்துள்ளனர். தெலங்கானா
மற்றும் ஆந்திரா மாநிலங்களில் மட்டும் தலா 4 பேர்
100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் மாணவர் எஸ்.சங்கர்பாலாஜி அதிகபட்சமாக 99.99 மதிப்பெண் எடுத்துள்ளார். மேலும், பி.ஆர்க்.,
பி.பிளானிங் படிப்புக்கான ஜேஇஇ தேர்வு முடிவுகள்
ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.
தொடர்ந்து
4-ம் கட்டத் தேர்வுகள்
ஆகஸ்ட் 26, 27, 31மற்றும்
செப்டம்பர் 1, 2-ம் தேதிகளில்
நடைபெற உள்ளன. கட்ஆஃப்உட்பட இதர விவரங்களை www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.