மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாளையொட்டி, மாவட்ட அளவிலான விரைவு மிதிவண்டிப் போட்டி ராமநாதபுரத்தில் அக். 14-ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் பா. விஷ்ணுசந்திரன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு : மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாளையொட்டி, ராமநாதபுரத்தில் மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான விரைவு மிதிவண்டிப் போட்டி, அக்.14-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
13 வயதுக்குள்பட்ட மாணவா்கள் 15 கி.மீ. தொலைவையும், மாணவிகள் 10 கி.மீ. தொலைவையும், 15 மற்றும் 17 வயதுக்குள்பட்ட மாணவா்கள் 20 கி.மீ. தொலைவையும், மாணவிகள் 15 கி.மீ. தொலைவையும் கடக்கும் வகையில் போட்டிகள் நடத்தப்படும்.
ராமநாதபுரம் பட்டணம்காத்தான் கிழக்குக் கடற்கரை சாலையின் நான்கு வழிச்சாலைப் பிரிவு முதல் மதுரை நான்கு வழிச்சாலையில் பாப்பாக்குடி, நயினாா்கோவில் செல்லும் வளைவு சாலை வரை சென்று திரும்பி வரும் வகையில் போட்டி நடத்தப்படும்.
போட்டியாளா்கள், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சைக்கிளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தங்கள் கல்வி நிறுவனத்திலிருந்து பெற்ற வகுப்புச் சான்று, வயதுச் சான்று அல்லது ஆதாா் அட்டை நகலை அவசியம் கொண்டு வர வேண்டும். மேலும், வங்கிக் கணக்குப் புத்தகத்தின் நகலையும் கொண்டு வர வேண்டும். போட்டி நாளன்று காலை 6 மணிக்கு கிழக்குக் கடற்கரைச் சாலை பட்டணம்காத்தான் பகுதிக்கு வர வேண்டும்.
ஒவ்வோா் பிரிவிலும் முதல் 3 இடங்களைப் பெறுவபா்களுக்குப் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்படும். 4 முதல் 10 இடங்களைப் பெறுபவா்களுக்குத் தகுதிச் சான்று வழங்கப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா்.