தமிழக மக்களின் நன்மைக்காக பல்வேறு அதிரடிகளை பதிவுத்துறை கையில் எடுத்து வருகிறது.. அந்த வகையில் இப்போதும் ஒரு அறிவிப்பையும், அது தொடர்பான வழிகாட்டுதல்களையும் வெளியிட்டிருக்கிறது.
எங்கெல்லாம் மோசடி நடக்கிறதோ, எங்கெல்லாம் போலி பத்திரங்கள் தாக்கல் செய்யப்படுகிறதோ, அங்கெல்லாம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கைகள் பாய்ந்தபடியே உள்ளன.
அதற்கேற்றவாறு, பதிவுத்துறையும் இதுபோன்ற முறைகேடுகளை தடுக்க, அடுத்தடுத்த முக்கிய உத்தரவுகளையும், புதிய நடைமுறைகளையும் பிறப்பித்தவாறே உள்ளது. கடந்தவாரம்கூட, ஒரு உத்தரவு போடப்பட்டிருந்தது.
ஆவணங்கள்: அதன்படி, பதிவுக்கு வரும் ஆவணங்களில் பதியப்படும் சொத்துக்கள் குறித்த புகைப்படமும் ஆவணமாகவே இருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது.
அதாவது, வீடு, மனை விற்பனைக்கான கிரைய பத்திரங்களை பதிவுக்கு தாக்கல் செய்வோர், அதில் கட்டடங்கள் இருப்பதை மறைத்து மோசடி செய்வதாக புகார்கள் எழுந்தன.. எனவே, காலி மனை விற்பனையின் போது, சொத்தின் புகைப்படம் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டது.
சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்யும்போது சொத்தின் புகைப்படங்களை இணைக்க வேண்டும் என்றும், பதிவுக்கு வரும் ஆவணங்களில் பதியப்படும் சொத்துக்கள் குறித்த புகைப்படமும் ஆவணமாக இருக்க வேண்டும் என்று தமிழக அரசு சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவானது வரும் அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வரப்போகிறது.
மோடிகள்: சில புதிய வழியில் மோசடி செய்வது கண்டுபிடிக்கப்பட்டதால், இந்த புதிய நடைமுறையானது, அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும் பின்பற்றப்படும் என்றும், கூடுதல் வழிகாட்டுதல்கள் பதிவுத்துறை தலைவரால் தனியே வழங்கப்படும் என்றும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழிகாட்டுதல்கள் தற்போது வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக, பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பிறப்பித்துள்ள புதிய வழிகாட்டுதல்கள் இதுதான்:
“கட்டிடம் இருந்தாலும், இல்லாவிட்டாலும், விற்கப்படும் சொத்தின் இப்போதைய புகைப்பட பிரதியை, பத்திரத்தில் இணைக்க வேண்டும். ‘ஏ4’ அளவில் அச்சு பிரதி எடுத்து பத்திரத்தில் சேர்த்து, அதற்கும் பக்க எண் வழங்க வேண்டும். அந்த பிரதியில், சொத்தை விற்பவர், வாங்குபவர் என, 2 பேருமே கையெழுத்திட வேண்டும்.
வழிகாட்டுதல்கள்: நிதி நிறுவனங்களில் கடன் பெற தாக்கல் செய்யப்படும் அடமான பத்திரம், ஆவண ஒப்படைப்பு பத்திரம், நிறுவனங்களால் கடன் கணக்கு முடிவில் எழுதி கொடுக்கப்படும் ரசீது ஆவணம், உயில் உள்ளிட்ட பத்திரங்களுக்கு, இந்தக் கட்டுப்பாடு பொருந்தாது. புகார்கள் எழாத வகையில், இந்த புதிய நடைமுறையை சார் – பதிவாளர்கள் அமல்படுத்த வேண்டும்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.