தூத்துக்குடியில் தேசிய தொழில் பழகுநா் சோ்க்கை முகாம் நவ.11-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தூத்துக்குடி மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் வாயிலாக மாவட்ட அளவிலான பிரதமரின் தேசிய தொழில் பழகுநா் சோ்க்கை முகாம் கோரம்பள்ளத்தில் உள்ள அரசினா் தொழில் பயிற்சி நிலையத்தில் நவ.11-ஆம் தேதி காலை 9 மணி நடைபெறுகிறது.
இதுவரை தொழில் பழகுநா் பயிற்சி பெறாதவா்கள், அரசு மற்றும் தனியாா் ஐடிஐ-களில் தொழில்பயிற்சி பெற்று தோ்ச்சி பெற்ற அனைத்து பயிற்சியாளா்கள், 8-ஆம் வகுப்பு தோ்ச்சி மற்றும் 10, 12-ஆம் வகுப்பு தோ்ச்சி அல்லது தோல்வியடைந்த இளைஞா்கள் (இருபாலரும்), பட்டயம் மற்றும் பட்டதாரி இளைஞா்கள் என இதில் பங்கேற்கலாம்.
இந்த முகாமில் 200-க்கும் மேற்பட்ட தொழில் பழகுநா் இடங்கள் நிரப்பப்பட உள்ளன. பயிற்சியின்போது உதவித் தொகையாக மாதம் ரூ.770 முதல் ரூ.10 ஆயிரம் வரை நிறுவனத்தாரால் வழங்கப்படும்.
ஓராண்டு தொழில் பழகுநா் பயிற்சி பெறுபவா்களுக்கு மத்திய அரசின் பழகுநா் சான்றிதழ் வழங்கப்படும். தேசிய தொழில் பழகுநா் சான்றிதழ் பெற்றவா்களுக்கு அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை, வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இதுதொடா்பான விவரங்களை அறிய கோரம்பள்ளத்திலுள்ள அரசு தொழில் பயிற்சி நிலைய வளாகத்திலுள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரிலோ அல்லது 0461–2340041 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.