முருகன் கோயில் இசைப் பயிற்சி வகுப்பில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு உணவு, உறைவிடம் சீருடை, ஊக்கத் தொகை ரூ.3,000 மாதந்தோறும் வழங்கப்படும் என அறங்காவலர் குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
எனவே ஆர்வமுள்ள மாணவர்கள் கலந்துகொண்டு படிக்க அழைப்பு விடுத்துள்ளார்.
திருத்தணி முருகன் கோயில் நிர்வாகம் சார்பில் தவில் மற்றும் நாகஸ்வரம் ஐந்தாண்டு சான்றிதழ் படிப்பு பகுதி நேரம் மற்றும் முழுநேர இசைப் பயிற்சி பள்ளி இந்தாண்டு முதல் தொடங்கப்பட உள்ளது. இந்தப் பயிற்சி வகுப்பில் இந்து மதத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் சேர்ந்து பயிற்சி பெறலாம்.
பகுதி நேரம் மற்றும் முழு நேரம், தங்கிப் பயில மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், சேர்வதற்கான நடைமுறைகள் குறித்து https://hrce.tn.gov.in மற்றும் https://tiruttanimurugan.hrce.tn.gov.in/ இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.
மேலும் தவில், நாகஸ்வரம் பயிற்சி பள்ளியில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் திருத்தணி முருகன் கோயில் தலைமை அலுவலகத்தில் வேலை நாட்களில், அலுவலக நேரத்தில் நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம்.
தவில், நாகஸ்வரம் பயிற்சி பெற 8ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு 13-16 வயதுக்குள் இருக்க வேண்டும். பயிற்சி காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும்.
பகுதி நேர தவில், நாகஸ்வரம் பயிற்சி மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும். மாணவர்களுக்கு இரவு சிற்றுண்டியுடன் இலவச பயிற்சி வழங்கப்படும். தவிர பயிற்சிபெறும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 ஊக்கத் தொகை வழங்கப்படும்.
முழு நேரம் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு உணவு, உறைவிடம், சீருடை மற்றும் ஊக்கத் தொகை, ரூ.3,000 மாதந்தோறும் வழங்கப்படும். இதற்கு ஜூலை 25ம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என திருத்தணி கோயில் அறங்காவல் குழு தலைவர் ஸ்ரீதரன், துணை ஆணையர் விஜயா, அறங்காவலர்கள் வி.சு ரேஷ்பாபு, மு.நாகன், ஜி.உஷாரவி, கோ.மோகன் ஆகியோர் தெரிவித்தனர்.