எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள், எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர்வதற்கு நாளை மறுநாள் 22ஆம் தேதி முதல், அக்டோபர் 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு நடந்து முடிந்த நீட் தேர்வில் தமிழகத்தில் 51 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சிக்குரிய மதிப்பெண்களை பெற்றிருக்கின்றனர். கடந்த ஏழாம் தேதி தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு குறித்த அறிவிப்பை மாணவர்கள் எதிர்பார்த்து காத்து இருந்தனர்.
இந்த நிலையில் இன்று அமைச்சர் மா.சுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 22 ஆம் தேதி முதல் அக்டோபர் 3ஆம் தேதி வரை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
அதிகரிக்கும் காய்ச்சல்.. தமிழகத்தில் நாளை 1000 இடங்களில் சிறப்பு முகாம் – அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிவிப்பு
www.tnhealth.tn.gov.in, tnmedicalselection.org ஆகிய இணையதளங்கள் வழியாக மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என்று, ஒட்டுமொத்தமாக 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5175 இடங்களும்,
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். 3050 இடங்கள், 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 200 இடங்களும், அரசு ஒதுக்கீட்டில் 20 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் 1960 இடங்களும் என மொத்தம் 10,385 இடங்கள் உள்ளன.
இவற்றில் ஒட்டுமொத்த எம்பிபிஎஸ் இடங்கள் எண்ணிக்கை 8225. பி.டி.எஸ். படிப்புக்கான இடங்கள் எண்ணிக்கை 2160. மருத்துவ படிப்பு சேர்க்கையில், அகில இந்திய கலந்தாய்வின் முதல் சுற்று முடிவடைந்த பிறகு, தமிழகத்தில் கலந்தாய்வு துவங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.