மகளிர் உரிமை தொகை திட்டத்தில் பதிவு செய்ய ஆகஸ்ட் 18,19,20 ஆகிய மூன்று நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் .
இது குறித்து அமைச்சர் பெரியசாமி தனது செய்தி குறிப்பில்; 22.07.2023 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம், இந்திரா காந்தி விதவையர் ஓய்வூதிய தேசியத் திட்டம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்ற மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம், 50 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம், இலங்கை அகதிகளுக்கான (முதியோர், ஆதரவற்ற விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள்) ஓய்வூதியத் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு முதியோர் ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு திட்டங்களின் ஓய்வூதியத்தை மாதத்திற்கு ரூபாய் 1200-ஆக உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது.
அரசு வழங்கும் முதியோர் ஓய்வூதியத்தால், அந்தக் குடும்பத்தில் உள்ள தகுதியான பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பலன் பெறுவது தடைபடக்கூடாது என்று முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார். எனவே, இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
தற்பொழுது விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளின் குடும்பத் தலைவிகள், முதியோர் ஓய்வூதியத் திட்டங்களில் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள தகுதிவாய்ந்த மகளிர் மற்றும் ஏற்கெனவே முகாம்களில் பதிவு செய்ய நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் வருகை புரிய இயலாத குடும்பத் தலைவிகள் விண்ணப்பங்கள் பதிவு செய்ய, ஆகஸ்ட் 18,19,20 ஆகிய மூன்று நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.