வக்ஃபு நிறுவனங்களில் பணிபுரியும் உலமாக்கள் புதிய இருசக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு -தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு, வேலூா் மாவட்டத்தில் உள்ள 110 வக்ஃபு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்கள் தங்கள் பணியை செம்மையாகவும், சிறப்பாகவும் செய்யவும், சமயப்பணி ஆற்றவும் புதிய இருசக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்ட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபருக்கு, இருசக்கர வாகனத்தின் மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது வாகனத்தின் விலையில் ரூ.25,000, இதில் எது குறைவோ அந்தத் தொகை மானியமாக வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க நிா்ணயிக்கப்பட்ட தகுதிகளில் கல்வி, வயது குறித்த விவரங்களில் திருத்தங்கள் மேற்கொண்டு அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, இத்திட்டத்தின் கீழ் தகுதியான உலமா பணியாளா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இத்திட்டத்தில் விண்ணப்பிக்க தமிழகத்தில் வக்ஃபு வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு வேலூா் மாவட்டத்திலுள்ள வக்ஃபு நிறுவனங்களில் உலமாக்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும். தமிழகத்தைச் சோந்தவராக, 18 முதல் 45 வயதுக்கு உள்பட்டவராகவும் இருக்க வேண்டும். இருசக்கர வாகனம் ஓட்டுநா் உரிமச் சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும். மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 110 வக்ஃபு நிறுவனங்களில் ஒவ்வொன்றிலும் ஒன்றுக்கு மேற்பட்டோா் மானிய உதவி கோரி விண்ணப்பித்தால் பேஷ் இமாம், அரபி ஆசிரியா்கள், மோதினாா், முஜாவா் என்ற முன்னுரிமையின் அடிப்படையில் ஒருவருக்கு மட்டும் மானியத்தொகை வழங்கப்படும்.
தகுதியுள்ள உலமா பணியாளா்கள் இத்திட்டம் தொடா்பான மேலும் விவரங்கள், படிவத்தை வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட சிறுபான்மையினா் நலஅலுவலா் அலுவலகத்திற்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சமா்ப்பித்து பயன்பெறலாம்.