மண்ணில்லாமல் தண்ணீரை மட்டுமே பயன்படுத்தி குறைந்த செலவில் காய்கறி சாகுபடி
விவசாயத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல பல தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
குறைந்த விலையில், அதிக மகசூலைப் பெறவதற்கான வழிமுறைகளை, விவசாயிகளுக்கு அவ்வப்போது வழங்கி வருகின்றனர் வேளாண் அதிகாரிகள். இயற்கை உரங்களை கையாள்வது குறித்தும், மகசூலை அதிகரிக்கும் நுட்பங்கள் குறித்தும் பல விதமான பயிற்சிகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. பல விவசாயிகள் செயற்கை உரங்களைத் தவிர்த்து, இயற்கை உரங்களை கையாள முன்வருகின்றனர்.
இந்நிலையில் மண்ணில்லாமல், தண்ணீரை மட்டுமே பயன்படுத்தி விவசாயம் செய்யும் ஹைட்ரோபோனிக்ஸ் முறைக்கு வரவேற்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. விவசாயம் செய்ய நினைக்கும் நிலமில்லாதோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதே இதற்கு முக்கிய காரணம்.
ஹைட்ரோபோனிக்ஸ் (Hydroponics)
தண்ணீர் வழியாக அல்லது காற்றில் உள்ள ஈரப்பதம் வழியாக உணவுப் பொருட்களை, விளையச் செய்வதே ஹைட்ரோபோனிக்ஸ் எனப்படும் மண்ணில்லா சாகுபடி முறை. இதன் மூலமாக, வளரும் பயிர்களின் தண்ணீர்த் தேவையை 70% வரை குறைக்க முடியும். அதோடு, நிலம் மற்றும் மண் தேவையும் குறைகிறது. மண்ணில்லா விவசாயம் மூலமாக, செங்குத்து அல்லது பல்லடுக்கு பண்ணைய முறையில், காய்கறி உற்பத்தியை 10 மடங்கு அதிகரிக்க செய்கிறது.
செங்குத்து இடைவெளியைப் உபயோகப்படுத்தி, அடுக்கு முறைகளில் பயிர்களை மிக எளிதாக விளைவிக்கலாம். பசுமை குடிலில் இருப்பது போல ஒளி, வெப்பநிலை, காற்றின் ஈரப்பதம் மற்றும் கரியமில வாயு உட்பட அனைத்து வானிலை காரணிகளையும், செங்குத்து இடைவெளி முறையில் கட்டுப்படுத்தலாம். சமமான தளத்தில் பயிரிட்டால், பயிர்களுக்கு குறைந்த அளவிலான சூரிய ஒளியே கிடைக்கும். அதுவே, செங்குத்து முறையில் பயிரிட்டால் அதிக அளவிலான சூரியஒளி கிடைக்கும். இதனால், உற்பத்தி திறனும் அதிகரிக்கும்.
செங்குத்து பண்ணைய முறை (Vertical farm system)
பாலைவனம், மலையோர நகரங்கள் மற்றும் பெருநகரங்களில் பலதரப்பட்ட காய்கறிகளை விளைவிக்க, செங்குத்து பண்ணைய முறை தான் அதிகளவு கைகொடுக்கிறது. நிலப் பயன்பாட்டினை அதிகரிக்கச் செய்து, இயற்கை வளங்களை பாதுகாக்கவும் செய்கிறது. உணவு உற்பத்தியும், நுகர்வும் ஒரே இடத்தில் நிகழ்வதால் மிக எளிதான விவசாய தொழில்நுட்ப முறையாக, மண்ணில்லா விவசாயம் பார்க்கப்படுகிறது.
ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் விவசாயம் செய்ய, குறைந்த செலவே ஆகிறது. இருப்பினும், மகசூல் அதிகளவில் கிடைப்பதால், தற்போது மண்ணல்லா விவசாய முறைக்கு வரவேற்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.