தமிழகம் முழுவதும் ஏப்ரல் 20 முதல் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டு தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
மேலும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவுவதை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் அமலில் இருந்து வருகிறது. கரோனா நோய் பரவல் நிலை, தற்போது அதிகரித்து வரும் நிலையிலும், வெளிநாடுகளில் உருமாறிய கரோனா வைரஸின் தாக்கம், அண்டை மற்றும் இதர வெளி மாநிலங்களில் அதிகரித்து வரும் நிலையிலும், கரோனா வைரஸ் பாதிப்பிற்குள்ளானவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதை கருத்தில் கொண்டும், கரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாடு முழுவதும் பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு தளர்வுகளுடன், சில புதிய கட்டுப்பாடுகளுடன், 30.4.2021 நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில், பொது இடங்களில், பொது நிகழ்ச்சிகள், விழாக்கள், கூட்டங்கள் போன்ற நிகழ்வுகளில் மக்கள் முகக்கவசம் அணிவதைத் தவிர்ப்பதாலும், பணியிடங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றத் தவறுவதாலும், சமீபகாலத்தில் கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதைக் காணமுடிகிறது. குறிப்பாக 28.3.2021 அன்று, 13,070 நபர்கள் கரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், 17.4.2021 அன்று கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 65,635 ஆக உயர்ந்துள்ளது. 12.4.2021 அன்று தலைமைச் செயலர், அரசு ஆலோசகர், அனைத்து துறை உயர் அலுவலர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள், பொது சுகாதார வல்லுநர்கள் குழுவுடன் முதல்வர் ஆய்வுக் கூட்டம் நடத்தி, கரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கினார்கள்.
மேலும், தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தொற்று காரணமாக நிலவும் சூழ்நிலையினை கண்காணித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ள குழு, நிலைமையினை தொடர்ந்து கண்காணித்து, நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அவ்வப்போது அறிவுரைகளும் வழங்கி வருகிறது. கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த அரசு முனைப்பான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு, அதிகரித்து வரும் நோய்த் தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு, ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள பல நடவடிக்கைகளுக்கு சில கட்டுப்பாடுகளையும் அரசு விதித்துள்ளது.
இருப்பினும், பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியினை கடைப்பிடிக்காததாலும், நாளுக்கு நாள் தொடர்ந்து நோய்த் தொற்று அதிகரித்து வருவதால், முதல்வர் இன்று (18.4.2021) தனது முகாம் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்கள். பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஏற்கனவே தடைவிதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளுடன், கீழ்க்காணும் செயல்பாடுகளுக்கும் 20.4.2021 அதிகாலை முதல் மறு உத்தரவு வரும் வரை தடை விதிக்கப்படுகிறது:-
இரவு நேர ஊரடங்கு:-
மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இரவு 10.00 மணி முதல் காலை 4.00 மணி முடிய இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும். இரவு நேர ஊரடங்கின் போது, தனியார்/பொது பேருந்து போக்குவரத்து, வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படாது.
தமிழ்நாட்டில் இரவு நேரங்களில் பொது ஊரடங்கு அமலில் இருப்பதால், வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் போக்குவரத்தும் மேற்கூறிய காலகட்டத்தில் (இரவு 10.00 மணி முதல் காலை 4.00 மணி வரை) செயல்பட அனுமதிக்கப்படமாட்டாது.
மாநிலங்களுக்கு இடையேயான பொது/தனியார் பேருந்து சேவைகளின்போது கரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்தல், கூட்ட நெரிசலை தவிர்த்தல் ஆகியவற்றை தவறாமல் பின்பற்றுவதை சம்பந்தப்பட்ட போக்குவரத்து நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.
எனினும், அவசர மருத்துவத் தேவைகளுக்கும், விமானநிலையம்/ ரயில்நிலையம் செல்ல மட்டும் வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படும். மேலும், அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிக்கை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் இரவு நேர ஊரடங்கின் போது அனுமதிக்கப்படும்.
ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர் தொடர்ந்து இரவிலும் செயல்படலாம்.
பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.
தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இரவு நேர ஊரடங்கின்போது செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும், இந்நிறுவனங்களில் இரவு நேரப் பணிக்கு செல்லும் பணியாளர்களும், தனியார் நிறுவனங்களின் இரவு காவல் பணிபுரிபவர்களும், தொடர்புடைய நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது அனுமதி கடிதம் வைத்திருப்பின், வீட்டிலிருந்து பணியிடத்திற்கு சென்று வீடு திரும்ப அனுமதிக்கப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு:-
மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். அன்றைய தினம் இறைச்சி கடைகள், மீன் மார்கெட், காய்கறி கடைகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், மற்றும் அனைத்து கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட மாட்டாது. இதை கடைபிடிக்காதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
எனினும், அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள், போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், அனைத்து சரக்கு வாகனங்கள், விவசாயிகளின் விளை பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள், எரிபொருளை எடுத்துச்செல்லும் வாகனங்கள் ஆகியவை முழு ஊரடங்கின் போது அனுமதிக்கப்படும்.
முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில், உணவகங்களில் காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், நண்பகல் 12.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. ஸ்விக்கி, சோமாட்டோ போன்ற மின் வணிகம் மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுதிக்கப்படுகின்றது. மற்ற மின் வணிக நிறுவனங்களின் வேவைகளுக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் அனுமதி இல்லை.
ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் பணியாற்றலாம்.
தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் முழு ஊரடங்கின்போதும் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.
முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்கள் உள்பட அனைத்து நாட்களிலும், திருமணம் / திருமணம் சார்ந்த நிகழ்வுகள் (கலந்து கொள்வோர் எண்ணிக்கை 100 நபர்களுக்கு மிகாமல்) மற்றும் இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு (கலந்து கொள்வோர் எண்ணிக்கை 50 நபர்களுக்கு மிகாமல்) ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் நடத்துவதற்கும் அதில் கலந்துகொள்வதற்கும் எந்தவிதமான தடையுமில்லை.
பொது:-
- நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்து சுற்றுலாத் தலங்களுக்கு, உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல அனைத்து நாட்களிலும் தடை விதிக்கப்படுகிறது.
- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடற்கரைப் பகுதிகளிலும், அனைத்து நாட்களிலும், பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
- பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள் மற்றும் தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், அகழ்வைப்பகங்கள் மற்றும் அருங்காட்சியகங்களுக்கு அனைத்து நாட்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
- தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் குறைந்தபட்சம் 50 சதவீத பணியாளர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய (றடிசம கசடிஅ hடிஅந) அந்தந்த நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, தேநீர் கடைகள், உணவு விடுதிகள், காய்கறி கடைகள், பலசரக்கு கடைகள் உட்பட அனைத்து கடைகளும், வணிக வளாகங்கள், அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி) ஒரே நேரத்தில் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன், இரவு 9.00 மணி வரைமட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.
- கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, மதம் சார்ந்த திருவிழாக்கள் மற்றும் கூட்டங்களுக்கு 10.4.2021 முதல் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே குடமுழுக்கு/திருவிழா நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர்/இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் அனுமதி பெற்றிருந்தாலோ அல்லது குடமுழுக்கு நடத்த தேதி நிர்ணயம் செய்திருந்து முன்னேற்பாடுகள் செய்திருந்தாலோ, கோயில் பணியாளர்கள், கோயில் நிர்வாகத்தினருடன் பொதுமக்கள் 50 நபர்களுக்கு மிகாமல் கலந்துகொண்டு, உரிய நடைமுறைகளை பின்பற்றி குடமுழுக்கு நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது.
- கரோனா தொற்றை கருத்தில் கொண்டு, புதிதாக குடமுழுக்கு/திருவிழாக்கள் நடத்துவதை சம்பந்தப்பட்ட நிர்வாக அமைப்புகள், தற்காலிகமாக ஒத்திவைக்க கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். அத்தகைய நிகழ்வுகளுக்கு தற்போதைய சூழ்நிலையில் அனுமதி அளிக்கப்பட மாட்டாது.
- +2 மாணவர்களுக்கான தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மூலம் நடத்தப்படும் பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படுகிறது. இருப்பினும், +2 மாணவர்களுக்காக தற்போது நடைபெற்று வரும் செயல்முறைத் தேர்வு மட்டும் ஏற்கனவே திட்டமிட்டபடி நடத்தப்படும்.
- கல்லூரி/பல்கலைக்கழக ஆசிரியர்கள் தங்கள் வீட்டிலேயே இணைய வழியாகவகுப்புகளை எடுக்க வேண்டும்.
- அரசு மற்றும் தனியார் கல்லூரி/பல்கலைக்கழக தேர்வுகள் இணைய வழியாக மட்டுமே நடத்தப்பட வேண்டும்.
- கல்வி சார்ந்த பயிற்சி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள், இணைய வழியாக மட்டுமே பயிற்சி வழங்க அனுமதிக்கப்படுகிறது.
- கோடை கால முகாம்கள் நடத்த தடை விதிக்கப்படுகிறது.
- தேவையான உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவ வசதிகள் உடைய தனியார் மருத்துவமனைகளுடன், விருப்பப்படும் தங்கும் விடுதிகள் இணைந்து கோவிட் பாதுகாப்பு மையங்களாக செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. இதனை சுகாதாரத்துறை ஆய்வு செய்து, தேவைப்படும் அனுமதியை வழங்கலாம். இத்தங்கும் விடுதிகளில் பிற வாடிக்கையாளர்களை தங்க வைக்கக்கூடாது.
- நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, திருமண நிகழ்வுகளில் 100 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிவது, சோப்பு அல்லது கை சுத்திகரிப்பான் கொண்டு கைகளை சுத்தம் செய்வது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது ஆகியவற்றை தவறாமல் பின்பற்ற திருமண மண்டப நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில், மண்டப உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
- நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிவது, சோப்பு அல்லது கை சுத்திகரிப்பான் கொண்டு கைகளை சுத்தம் செய்வது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது ஆகியவற்றை தவறாமல் பின்பற்றுவதை திரையரங்க நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில், திரையரங்க உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
- நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிவது, சோப்பு அல்லது கை சுத்திகரிப்பான் கொண்டு கைகளை சுத்தம் செய்வது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது ஆகியவற்றை தவறாமல் பின்பற்றுவதை உணவக/தேநீர் கடை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
- கரோனா நோய்த்தொற்று பரவாமல் இருக்க ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தீவிரமாக பின்பற்றப்படுவதை கண்காணிக்க மாவட்டம் தோறும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படும். கரோனா நோய்த்தொற்று சம்பந்தமாக வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.