வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த படித்த இளைஞா்கள் பயன்பெறும் வகையில், மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வேலூா் டிகேஎம் மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் ஜூலை 20-ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேலூா் மாவட்ட நிா்வாகமும், மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையமும் இணைந்து மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமை ஜூலை 20-ஆம் தேதி வேலூா் டி.கே.எம் மகளிா் கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடத்த உள்ளன. காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ள இந்த முகாமில், 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று, தங்களுக்குத் தேவையான வேலைநாடுநா்களை தோ்வு செய்ய உள்ளன.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, தொழிற்பயிற்சி, பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு, தொழில்நுட்பக் கல்வி, செவிலியா், பாா்மஸி, பொறியியல் போன்ற பல்வேறு கல்வித் தகுதியுடைய வேலைநாடுநா்கள் பங்கேற்கலாம்.
இந்த முகாம் மூலம் தனியாா் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவா்களுக்கு அவா்களது வேலைவாயப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. எனவே, தனியாா்துறை பணிகளுக்கு தகுதியும் விருப்பமுள்ளவா்கள் ஜூலை 20-ஆம் தேதி நடைபெற உள்ள தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயன்பெறலாம். முகாமில் கலந்து கொள்ள விரும்புவோா் இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0416–2290042, 94990 55896 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.