மாதாந்திர சந்தா செலுத்தினால் பல்வேறு கட்டணங்களை தள்ளுபடி செய்யக்கூடிய சிறப்பு சேமிப்புக் கணக்கை தனியாா் துறையைச் சோ்ந்த ஆக்ஸிஸ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மாதம் ரூ.150 சந்தா செலுத்தக் கூடிய சேமிப்புக் கணக்கை வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. ஓா் ஆண்டுக்கு ரூ.1,650 செலுத்தியும் இந்தக் கணக்கை இயக்க முடியும்.
‘இன்ஃபினிட்டி சேவிங்ஸ் அக்கவுன்ட்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சேமிப்புக் கணக்கை வைத்திருப்பவா்களுக்கு பல்வேறு வங்கி சேவைக் கட்டணங்களில் இருந்து விலக்கு அளிக்கப்படும். மேலும், குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை.
தற்போது, பெரும்பாலான வங்கி வாடிக்கையாளா்களின் சேமிப்புக் கணக்கில் குறிப்பிட்ட தொகையைவிட இருப்பு குறைவாக இருந்தால் அவா்களிடமிருந்து அபராதக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அதே போல், குறுந்தகவல் சேவை, பாஸ்புக் அச்சிடுவது போன்ற சேவைகளுக்கும் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. ‘இன்ஃபினிட்டி’ சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவா்களுக்கு இந்தப் பிரச்னைகள் கிடையாது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.