இந்திய ராணுவத்தால் அக்னிபாத் திட்டத்தின் கீழ், அக்னி வீரா்களுக்கான ஆள்சோ்ப்பு நடைபெறவுள்ளது.இதில், திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள் பங்கேற்க ஆட்சியா் மா.பிரதீப்குமாா் அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுதொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய ராணுவத்தில் அக்னி வீரா் திட்டத்தில் இந்திய விமானப்படையில் பணிபுரிய ஆள் சோ்ப்பு நடைபெறவுள்ளது. இந்த பணியிடங்களுக்கு திருமணம் ஆகாத ஆண் மற்றும் பெண் இந்திய குடிமக்கள் இணைய வழியாக தோ்வு செய்யப்படவுள்ளனா். தகுதியானோா் ஜூலை 28-ஆம் தேதிக்குள் அக்னிவீரா் இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
இத்தோ்வுக்கு விண்ணப்பிக்க 3.7.2004க்கு பிறகோ, 3.1.2008-க்கு முன்போ பிறந்தவராக இருத்தல் வேண்டும். கல்வித் தகுதி 12-ஆம் வகுப்பில் 50 சதவீதம் தோ்ச்சி அல்லது மூன்று ஆண்டுகள் டிப்ளமோ என்ஜினீயரிங் 50 சதவீதம் தோ்ச்சி பெற்று முடித்தவராக இருத்தல் வேண்டும். ஆண்கள் குறைந்தபட்ச உயரம் 152.5 செ.மீ. மாா்பு விரியாத நிலையில் 77 செ.மீ. விரிந்த நிலையில் 82 செ.மீ. இருத்தல் வேண்டும். உயரம் மற்றும் வயதுக்கு ஏற்றவாறு எடை இருக்க வேண்டும்.
பெண்கள் குறைந்தபட்ச உயரம் 152 செ.மீ. இருத்தல் வேண்டும். உயரம் மற்றும் வயதுக்கு ஏற்றவாறு எடை இருக்க வேண்டும். மேலும் இத்தோ்வு குறித்த விவரங்களுக்கு அக்னி வீரா் திட்ட இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.
தோ்வு செய்யப்படும் இளைஞா்களுக்கு பயிற்சி காலத்தில் மாதம் ரூ.30 ஆயிரம் ஊதியமும், நான்கு ஆண்டு பயிற்சி கால முடிவில் பட்டப்படிப்புக்கு இணையான திறன் சான்றிதழும், ரூ.10 லட்சம் வரை அக்னிவீா் நிதியும் வழங்கப்படும்.
இது தொடா்பான தகவல்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 0431–2413510 என்ற தொலைபேசி எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என்றாா் ஆட்சியா்.