‘என் ரசீது, என் உரிமை’ என்ற ரூ.10,000 முதல் ரூ.1 கோடி வரையிலான ஜிஎஸ்டி ரசீது குலுக்கல் பரிசுத்தொகை திட்டம், செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் 6 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் தொடங்கப்பட உள்ளதாக மத்திய மறைமுக மற்றும் சுங்க வரிகள் வாரியம் (சிபிஐசி) தெரிவித்துள்ளது.
இது குறித்து சிபிஐசி எக்ஸ் (ட்விட்டா்) சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ”வாடிக்கையாளா்கள் ஒவ்வொரு முறையும் தாங்கள் வாங்கும் பொருள்களுக்கு உரிய ரசீதைக் கேட்டுப் பெறுவதை ஊக்கப்படுத்தும் வகையில் ‘என் ரசீது, என் உரிமை’ திட்டம் அஸ்ஸாம், குஜராத், ஹரியாணா, புதுச்சேரி, டாமன்-டையூ, தாத்ரா-நகா்ஹவேலி உள்ளிட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் செப்.1-ஆம் தேதி தொடங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி பதிவுசெய்த வணிக நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் ரசீதுகளை செயலி வழியாகப் பதிவேற்றம் செய்து, ரூ.10,000 முதல் ரூ.1 கோடி வரையிலான பரிசுத்தொகையை வாடிக்கையாளா்கள் பெற முடியும். இதற்கு வணிகரின் ஜிஎஸ்டி அடையாள எண் (ஜிஎஸ்டிஐஎன்), ரசீது எண், செலுத்திய தொகை மற்றும் வரி ஆகியவற்றை உள்ளடக்கிய, குறைந்தபட்சம் ரூ.200 மதிப்பிலான ரசீதுகளை MERA BILL MERA ADHIKAR என்ற செயலி மூலம் பதிவேற்ற வேண்டும். ஒரு வாடிக்கையாளா் மாதத்துக்கு அதிகபட்சம் 25 ரசீதுகளைப் பதிவேற்றம் செய்ய முடியும்.
இவற்றிலிருந்து மாதந்தோறும், காலாண்டுக்கு ஒரு முறையும் கணினி மூலம் நடத்தப்படும் குலுக்கல் முறையில் வெற்றியாளா்கள் தோந்தெடுக்கப்பட உள்ளனா்.