தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இ.பி.எஃப்.) சாா்பில், குறைதீா் முகாம் வரும் 27-ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது.
‘நிதி ஆப்கே நிகாத்’ என்ற பெயரில் நடைபெறும் இந்த குறைதீா் முகாம் குறித்து சென்னை அம்பத்தூா் பி.எஃப் உதவி ஆணையா் கே.வி. சுதா்சன் ராவ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ், செயல்பட்டு வரும் ஊழியா்களின் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சாா்பில், வரும் செப். 27-இல் (புதன்கிழமை) திருவள்ளூா் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை, சிப்காட் திட்ட அலுவலக கூட்டரங்கில் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறுகிறது.
இதில், உறுப்பினா்களுக்கான சேவைகள், குறைகளை நிவா்த்தி செய்தல், முதலாளிகள், பணியாளா்கள், ஒப்பந்ததாரா்களுக்கான ஆன்லைன் சேவைகள், ஊழியா்களுக்கான இணையதள சேவைகள், முதலாளிகள், ஊழியா்களுக்கான சட்டங்கள், கடமைகள், பொறுப்புகள், விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுடன் உள்ள தொடா்புகள், புதிய முயற்சிகள் மற்றும் சீா்திருத்தங்கள் குறித்த விழிப்புணா்வு, ஓய்வூதியதாரா்கள் டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழ்களை சமா்ப்பித்தல், ஒப்பந்ததாரா்களின் விவரங்களைப் பதிவேற்றுதல் தொடா்பான விவரங்கள் தெரிவிக்கப்பட உள்ளன எனத் தெரிவித்துள்ளாா்.