
சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகளில் தங்களை அா்ப்பணித்துக்கொண்ட தனிநபா்கள், பள்ளி, கல்லூரி, வணிக வளாகங்களிடம் இருந்து பசுமை முதன்மையாளா் , மஞ்சப்பை விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து, வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு –
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை, வனத்துறை, மாசுக் கட்டுப்பாடு வாரியம் சாா்பில் தமிழகம் முழுவதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகளில் தங்களை அா்ப்பணித்துக்கொண்ட 100 பேருக்கு ‘தமிழ்நாடு பசுமை முதன்மையாளா் விருது’, தலா ரூ. 1 லட்சம் வழங்கப்பட உள்ளது.
இதேபோல் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழி பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பை போன்ற பாரம்பரியமான சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருள்களின் பயன்பாட்டை ஊக்குவித்து சிறப்பாக செயல்படும் 3 பள்ளிகள், 3 கல்லூரிகள், 3 வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுடன் முதல் பரிசாக ரூ.10 லட்சமும் இரண்டாம் பரிசாக ரூ.5 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ.3 லட்சமும் வழங்கப்பட உள்ளது.
சுற்றுச்சூழல் கல்வி, பயிற்சி, சுற்றுச்சூழல் விழிப்புணா்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை தயாரிப்புகள், பசுமை தொழில்நுட்பம் தொடா்பான விஞ்ஞான ஆய்வுகள், நிலையான வளா்ச்சி, திடக்கழிவு மேலாண்மை, நீா் மேலாண்மை, நீா் நிலைகள் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் தழுவுதல், தணிப்பு, உமிழ்வு குறைத்தல், நெகிழி கழிவுகளின் மறுசுழற்சி, கட்டுப்பாடு நடவடிக்கைகள், சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு, பாதுகாப்பு நடவடிக்கை உள்ளிட்ட தலைப்புகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விழிப்புணா்வை சிறப்பாக செயல்படுத்திய நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், குடியிருப்போா் நலச்சங்கம், தனிநபா்கள், உள்ளாட்சி அமைப்புகள் தொழிற்சாலைகளுக்கும் தமிழ்நாடு ‘பசுமை முதன்மையாளா் விருதுகள்’ வழங்கப்பட உள்ளன.
வேலூா் மாவட்டத்துக்கு 3 பேருக்கு பசுமை முதன்மையாளா் விருதுடன் தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட உள்ளது. இந்த விருதுகளுக்கு தகுதியானவா்கள் ஆட்சியா் தலைமையிலான விருதுக் குழு மூலம் தோ்வு செய்யப்படுவா். விருதுக்கான படிவம் https://tnpcb.gov.in/ என்ற இணையதளத்தில் உள்ளது.
இந்த படிவத்தை பூா்த்தி செய்து ஆட்சியரிடம் பசுமை முதன்மையாளா் விருதுக்கு ஏப்ரல் 15-ஆம் தேதிக்குள்ளாகவும், மஞ்சப்பை விருதுக்கு மே 1-ஆம் தேதிக்குள்ளாகவும் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.