புதுச்சேரி பட்ஜெட்டில் அறிவித்தபடி காஸ் சிலிண்டருக்கு மானியத் தொகை அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சிவப்பு அட்டை ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.300, மஞ்சள் அட்டைக்கு ரூ.150 மானியம் தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு இம்முறை கடந்த மார்ச்சில் முழு பட்ஜெட் தாக்கலானது. அப்போது முதல்வர் ரங்கசாமி பல திட்டங்களை அறிவித்தார்.
குறிப்பாக, ‘சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்கப்படும்’ என்று அறிவிக்கப்பட்டது. பெண் குழந்தை பிறந்தால் ரூ.50 ஆயிரம் வைப்பு நிதி அக்குழந்தையின் பெயரில வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். ஏழை பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இதில், குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 மானியம், 13 ஆயிரம் பேருக்கு வழங்கி திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது புதிய பயனாளிகளை கண்டறியும் பணி நடந்து வருகிறது. சுமார் 75 ஆயிரம் பயனாளிகளுக்கு இத்திட்டத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வைப்புத்தொகை செலுத்தும் திட்டத்துக்கான அரசாணை அண்மையில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் சிலிண்டர் மானியத்துக்கு அரசாணை நேற்று வெளியானது. இதில், சிவப்பு நிற ரேஷன் கார்டுதாரர்களுக்கு சிலிண்டர் மானியமாக ரூ.300, அதேபோல் மஞ்சள் நிற ரேஷன் கார்டுக்கு ரூ.150 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதம் ஒரு சிலிண்டர் வீதம் ஆண்டுக்கு 12 சிலிண்டருக்கு இந்த மானியத் தொகை வழங்கப்பட உள்ளது.
அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.300 சிலிண்டர் மானியம் வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவித்த நிலையில், மஞ்சள் கார்டுகளுக்கு மானியத் தொகை ரூ.150 என பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மானிய தொகை கவுரவ ரேஷன் கார்டுதாரர்களுக்கு கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாணை வெளியிடப்பட்டுள்ளதால் இம்மாதத்துக்குள் மானியத் திட்டம் தொடங்கப்பட உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. புதுச்சேரியில் பெரும்பாலும் மஞ்சள் ரேஷன் அட்டைத்தாரர்களே உள்ளனர். வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் என குறிப்பிடப்பட்டு சிவப்பு அட்டைகள் வழங்கப்படுகின்றன.