இரண்டாண்டுகளுக்குப் பிறகு நாடு முழுவதும் ஆட்சேர்ப்பு முகாமை நடத்த இந்திய ராணுவம் முடிவெடுத்துள்ளது. முன்னதாக, பாதுகாப்புத் துறையில் உள்ள அனைத்து ஆயுதப்படை பணியாளர்களின் (அதிகாரிகள் தவிர்த்து ) சேர்க்கையும் தற்காலிக முறையில் (Tour of Duty Scheme) அமையும் என்றும் கூறப்பட்ட நிலையில், இந்திய ராணுவம் இந்த முடிவை எடுத்துள்ளது.
புதிய திட்ட முன்மொழிவின் படி, 25% படை வீரர்கள் 3 ஆண்டுகால ஒப்பந்த முறையின் கீழும், 25% வீரர்கள் 5 ஆண்டுகால ஒப்பந்த முறையின் கீழும் பணியமர்த்தப்பட உள்ளனர். மீதமிருக்கும் 50% வீரர்கள், பணி ஓய்வு வயது வரும் வரை பணியாற்றவுள்ளனர்.
ஆட்சேர்ப்பு முகாம்:
முந்தைய காலங்களில், ஆண்டுக்கு ஒருமுறை நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்ட ஆட்சேர்ப்பு முகாமினை இந்திய ராணுவம் நடத்தி வந்தது. இதன் மூலம்,சிப்பாய் பொதுப் பிரிவு, சிப்பாய் எழுத்தர், சிப்பாய் செவிலியர் உதவியாளர் உள்ளிட்ட பதவிகள் நிரப்பபட்டு வந்தன. இருப்பினும், கொரோனா பெருந்தொற்று முடக்கத்தின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆட்சேர்ப்பு முகாமை இந்திய ராணுவம் நிறுத்தியது. கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து இயல்பு நிலை திரும்பிய பிறகும் இந்த நிறுத்தம் தொடர்ந்தது.
சிப்பாய் பொதுப் பிரிவு போன்ற பதவிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு 21 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆட்சேர்ப்பு நடைபெறாததால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பணி உச்ச வரம்பை கடந்துள்ளனர். வயதுக்கான தகுதியை முற்றிலும் இழந்துள்ளனர். எனவே, ஆட்சேர்ப்பு முகாமினை மீண்டும் நடத்த திட்டமிட்டிருப்பது அதிகமான இளைஞர்களுக்கு நன்மை பயக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய புள்ளிவிவரங்களின் படி, இந்திய ராணுவத்தில் 97177 வீரர்கள் பணியடங்களும், இந்திய விமானப்படையில் 4850 வீரர்கள் பணியிடங்களும், இந்திய கடற்படையில் 11166 வீரர்கள் பணியடங்களும் காலியாக உள்ளன.
பாதுகாப்பு படை காலி பணியிடங்கள்
இந்தியன் ராணுவம்
- அதிகாரிகள் – 7476
- வீரர்கள் – 97177
இந்தியன் விமானப்படை
- அதிகாரிகள் – 621
- அதிகாரிகள் – 4850
இந்தியன் கப்பற்படை
- அதிகாரிகள் – 1265
- அதிகாரிகள் – 11166
நாட்டின் எல்லைக் கோட்டு பகுதிகளில், பல்வேறு முனைகளிலும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய தேவை இந்தியப் படையினருக்கு உள்ளது. எனவே, பாதுகாப்பு துறையில் பணியாளர்கள் பற்றாக்குறையை நீக்குவது முக்கியமானதாக கருதப்படுகுறிது.