ஆர்.எஸ்.மங்கலம்–ராமநாதபுரம் மாவட்டத்தில் விளையும் குண்டு மிளகாய் வத்தலுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
ஆர்.எஸ்.மங்கலம், பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி, அருகில் சிவகங்கை மாவட்ட கிராமங்களிலும் அதிகளவில் குண்டு மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது. நடப்பு ஆண்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 23 ஆயிரம் எக்டரில் குண்டு மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இப்பகுதியில் விளையும் ‘ராமநாதபுரம் முண்டு’ என்றழைக்கப்படும் குண்டு மிளகாய் வத்தல் மிதமான காரத்தன்மையுடன், அதிக மிளகாய் சாந்து உடையது. தற்போது இதற்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
இதனால் குண்டு மிளகாய்க்கு கூடுதல் விலை கிடைக்கும் என விவசாயிகள் நம்புகின்றனர். ஆர்.எஸ். மங்கலம் மிளகாய் நவதானிய சங்க தலைவர் அசோகன் கூறுகையில், நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்த புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
இதனால் உற்பத்தி திறன் அதிகரிக்கும். உலக அளவில் எளிதாக வர்த்தகம் செய்ய வாய்ப்பு கிடைக்கும், என்றார்.