பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் மூங்கிலில் தண்ணீர் குவளைகள், பல்துலக்கும் பிரஷ் என பல்வேறு பொருட்களை தயாரிக்கும் முறை குறித்து மகளிர் குழுவினருக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் இலவசமாக பயிற்சி அளித்து தொழில்முனைவோராக வழிகாட்டுகின்றனர் மதுரையைச் சேர்ந்த தம்பதி.
மதுரை எஸ்.எஸ்.காலனியைச் சேர்ந்தவர் சுதாகர் செல்வராஜ் (44). இவர் ஒரு சூழலியல் சுற்றுலா வழிகாட்டி. இவரது மனைவி தர்ஷணா. எம்பிஏ பட்டதாரி. இவர்கள் இருவரும் இணைந்து மூங்கிலில் தண்ணீர் குவளைகள், டீ குவளைகள், டூத் பிரஷ், மூங்கில் புட்டுக்குழாய், செல்போன் ஸ்டாண்ட், பரிசுக் கோப்பைகள் பல்வேறு பொருட்களை தயாரித்து விற்பனை செய்துவருகின்றனர். மேலும் பொருட்கள் தயாரிக்கும் முறைகள் குறித்து மகளிர் சுயஉதவி குழுக்களைச் சேர்ந்த பெண்களுக்கும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆகியோருக்கும் இலவசமாக பயிற்சியும் அளித்து வருகின்றனர்.
இது குறித்து சுதாகர் செல்வராஜ் கூறுகையில், ‘சூழலியல் சுற்றுலா வழிகாட்டியாக இருந்து காடுகள் மலைகளுக்கு சென்று வந்தேன். சுமார் ஒன்றரை டன் எடையுடைய யானை தினமும் 80 கிமீ பயணித்து இரை தேடினால் கொஞ்சம் கூட களைப்பின்றி முழு உற்சாகத்துடன் இருக்கும். இதற்கு என்ன காரணம் என ஆய்வு செய்தபோது, அது பெரும்பாலும் காடுகளிலுள்ள மூங்கில் இலைகள், குருத்துகளையே உணவாக உட்கொள்வதால் கிடைக்கும் சக்தியே காரணம் எனத் தெரிந்தது. அதிலிருந்து மூங்கிலிலிருந்து டீத்தூள் தயாரித்தேன். இதனை தமிழக அரசின் ஸ்டார்ட் அப் நிறுவனம் 2022-ல் பாராட்டி ரூ.10 லட்சம் ஊக்கத்தொகை அளித்தது. அதனை முதலீடாக வைத்து மூங்கிலில் இருந்து பல்வேறு பொருட்கள் தயாரிக்க ஆரம்பித்தோம்.
சூழலுக்கு உகந்த மூங்கில் டூத் பிரஷ், தண்ணீர் குவளை, டீ குவளை, வாட்டர் கேன், செல்போன் ஸ்டாண்ட், மூங்கில் புட்டு குழாய், சிறுவர்களுக்கான விளையாட்டுப்பொருட்கள், பேனா உள்ளிட்ட 87 வகையான பொருட்களை தயாரிக்கிறோம். பொருட்கள் உற்பத்தி செய்யும் முறைகளை மகளிர் சுயஉதவிக் குழுவினர், பள்ளி கல்லூரி மாணவர்களுக்கும் இலவசமாக பயிற்சி அளித்து வருகிறோம்.
தற்போது புதிதாக விளையாட்டு போட்டிகளில் விருது பெறுவோருக்கு பிரத்யேகமாக கோப்பையும் தயாரித்து வருகிறோம். சமீபத்தில் மதுரைக்கு வந்த விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிக்கு வழங்கினோம். அதனை பாராட்டினார். இன்னும் 150-க்குமேல் பொருட்களை தயாரிக்க உத்தேசித்துள்ளோம். மூங்கில் குடுவையில் தண்ணீர் பிடித்து குடித்தால் உடலுக்கு குளிர்ச்சி ஏற்படும். மூங்கில் வளர்த்தால் காற்று மாசுபாட்டை குறைக்கும்.
மேலும் மூங்கில் கட்டில், இருக்கைகள், மூங்கில் வீடுகளும் அமைத்து தருகிறோம். கல்லூரி, பள்ளிகளுக்கு சென்று மூங்கில் மரப் பயன்பாடுகள், பொருட்கள் உற்பத்தி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறோம். மேலும், மகளிர் சுயஉதவிக்குழுவினர், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்து வருகிறோம். மூங்கில் பயிரிட்டு விவசாயிகள் லாபம் பெறலாம் என்பதையும் வசாயிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்’ என்று அவர் கூறினார்.