கோவை-மேட்டுப்பாளையம் ரோடு, அரசினர் பெண்கள் ஐ.டி.ஐ.,யில் இலவச தொழிற்பயிற்சியில் நேரடி சேர்க்கை துவங்கி உள்ளது.
இம்மையத்தில் நடப்பு ஆண்டுக்கான நேரடி சேர்க்கை இம்மாதம், 15ம் தேதி வரை நடக்கிறது. இதில், 8ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்ற மகளிர் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
நேரில் வருவோருக்கு தொழில் பயிற்சி மைய வளாகத்தில் உள்ள உதவி மையம் வாயிலாக, விண்ணப்பம் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பயிற்சியில் சேர விரும்பும் பெண்களுக்கு உச்ச வயது வரம்பு ஏதுமில்லை மற்றும் சிறப்பு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவது இல்லை.
தொழில் பயிற்சி மையத்தில் ஓராண்டு பயிற்சியில், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் ப்ரோக்ராமிங், அசிஸ்டன்ட் டெஸ்ட் டாப் பப்ளிஷிங் ஆப்ரேட்டர் தொழில் பிரிவுகளிலும், ஈராண்டுக்கான பயிற்சியில், இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக், இன்பர்மேஷன் டெக்னாலஜி உள்ளிட்ட தொழில் பிரிவுகளும், ஆறு மாத பயிற்சியில், ஸ்மார்ட் போன் டெக்னீசியன் கம் ஆப் டெஸ்டர் தொழில் பிரிவும் பயிற்றுவிக்கப்படுகிறது.பயிற்சியில் தேர்ச்சி பெற்றால், மத்திய அரசின் தேசிய தொழில் சான்றிதழ் (என்.சி.வி.டி.,) வழங்கப்படும்.
அனைத்து பயிற்சியாளர்களுக்கும் மாதம், 750 ரூபாய் உதவித்தொகை, புதுமைப்பெண் திட்டத்தில் அரசு பள்ளியில் பயின்ற பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய், சைக்கிள், சீருடை, காலணி, பாட புத்தகங்கள், வரைபட கருவிகள், 30 கி.மீ., தொலைவு வரை இலவச பஸ் பயணம், நவீன தொழில் வளர்ச்சியை அறிந்து கொள்ளும் பொருட்டு, தொழிற்சாலைகளுக்கு நேரடியாக சென்று பயிற்சி பெறும் வசதி வழங்கப்படுகிறது.
மேலும், பயிற்சி முடிக்கும் நிலையில் வளாக நேர்காணல் வாயிலாக வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படுகிறது. மேலும், விபரங்களுக்கு, 98651 28182 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.