தமிழில் மொழிபெயர்ப்பு முயற்சிகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் நடிகர் கமல்ஹாசனின் கமல் பண்பாட்டு மையம் மொழிபெயர்ப்புப் பயிற்சி முகாமை நடத்துகிறது.
மொழிபெயர்ப்பாளர் ஜி.குப்புசாமி பயிற்சி அளிக்கவுள்ளார். இந்தப் பயிற்சி முகாமில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள், தங்களது சுயவிவரங்களுடன் kamalpanpattumaiyambooks@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். அத்துடன், சொந்தமாக மொழிபெயர்த்த ஒரு கட்டுரையை அல்லது ஒரு சிறுகதையை அந்த மொழிபெயர்ப்பின் மூல வடிவத்தோடு இணைத்து அனுப்ப வேண்டும். பயிற்றுநரால் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு செப்டம்பர் 26, 27 ஆகிய நாள்களில் சென்னையில் பயிற்சி அளிக்கப்படும்.
எஸ்.ஆர்.எம். தமிழ்ப் பேராய விருதுகள் அறிவிப்பு
எஸ்.ஆர்.எம். தமிழ்ப் பேராய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. புதுமைப்பித்தன் விருது, சுப்ரபாரதிமணியனுக்கும், பாரதியார் விருது கடற்கரய், எழில்வாணன் ஆகிய இருவருக்கும், அழ.வள்ளியப்பா விருது கீர்த்திக்கும், ஜி.யு.போப் மொழிபெயர்ப்பு விருது கிருஷ்ணப்ரியாவுக்கும், அப்துல் கலாம் விருது சுதா சேஷய்யனுக்கும், முத்துத்தாண்டவர் தமிழ் இசை விருது செ.சுப்புலட்சுமிக்கும், பரிதிமாற்கலைஞர் ஆய்வறிஞர் விருது வீரபாண்டியனுக்கும், முத்தமிழ் அறிஞர் கலைஞர் சமூக நீதி விருது கோ.ரகுபதிக்கும், சுதேசமித்திரன் தமிழ் இதழ் விருது இலக்கியபீடம் இதழுக்கும், தொல்காப்பியர் தமிழ்ச் சங்க விருது திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்துக்கும், பாரிவேந்தர் பைந்தமிழ் விருது ஆறு.அழகப்பனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன.
நாகை புத்தகத் திருவிழா
நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அரசுப் பொது நூலக இயக்ககமும் இணைந்து ஒருங்கிணைக்கும் நாகைப் புத்தகத் திருவிழா மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நாகூர் சாலையில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மாதம் 26ஆம் தேதி (26.08.24) வரை இந்தப் புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளது. இந்து தமிழ் திசை பதிப்பகமும் (அரங்கு எண்: 1)
இந்தப் புத்தகக் காட்சியில் அரங்கு அமைத்துள்ளது. இங்கு இந்து தமிழ் திசை வெளியிட்ட நூல்கள் அனைத்தும் தள்ளுபடி விலையில் கிடைக்கும்.