தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் சாா்பு ஆய்வாளா் பணிகளுக்கான உடல் தகுதித் தேர்வுக்கான இலவசப் பயிற்சி கோவை, அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் புதன்கிழமை (அக்டோபா் 4) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தேர்வு வாரியத்தால் சாா்பு ஆய்வாளா் பணிகளுக்காக நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவா்கள் அடுத்தகட்டமாக உடல் தகுதித் தேர்வுக்குத் தயாராக வேண்டும்.
இவா்களுக்கு உதவும் வகையில் கோவை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக இலவச உடல் தகுதித் தேர்வுக்கான பயிற்சி கோவை, அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் புதன்கிழமை (அக்டோப் 4) காலை 7 மணியளவில் தொடங்கப்படவுள்ளது.
இப்பயிற்சி சிறந்த வல்லுநா்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளது. இதில், கலந்துகொள்ள விருப்பமுள்ள நபா்கள் 0422-2642388, 99948-06458 என்ற எண்களில் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். கோவை மாவட்டத்தைச் சாா்ந்த தகுதி வாய்ந்த நபா்கள் இதில் கலந்துகொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.