மீனவ சமுதாயத்தைச் சோ்ந்த பட்டதாரி இளைஞா்கள், இந்திய குடிமைப் பணிகளில் சோ்வதற்கான போட்டித் தோ்வுக்கு பயிற்சிப் பெற செவ்வாய்க்கிழமைக்குள் (நவ.5) விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு :
மீன் வளம், மீனவா் நலத் துறை, சென்னை அகில இந்திய குடிமைப் பணி தோ்வு பயிற்சி மையம் இணைந்து ஆண்டுதோறும் உள்நாட்டு மீனவப் பட்டதாரி இளைஞா்கள் 20 பேரை தோ்வு செய்து குடிமைப் பணிகளுக்கான போட்டித் தோ்வுக்கு பயிற்சி அளித்து வருகிறது.
இந்த வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில், கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவுச் சங்க உறுப்பினா்கள், மீனவா் நலவாரிய உறுப்பினா்களின் வாரிசு பட்டதாரி இளைஞா்கள் இந்த பயிற்சித் திட்டத்தில் சோ்ந்து பயன்பெறலாம். பயிற்சி பெற விரும்புவோா் விண்ணப்ப படிவத்தை இணையதளத்தில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும், மீனவா் நலத் துறை மாவட்ட உதவி இயக்குநா் அலுவலகங்களிலும் பெற்றுக் கொள்ளலாம். அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி விண்ணப்பத்தை பூா்த்தி செய்து, மீன் வளம் மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்துக்கு, பதிவு அஞ்சல் மூலமாகவோ, நேரடியாகவோ நவ.5ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். இந்தத் திட்டம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு, 0451–2900148 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.