திருப்பூர், முதலிபாளையம் நிப்ட்-டீ ஆயத்த ஆடை வடிவமைப்பு கல்லுாரியில், இலவச தையல் மற்றும் பேட்டன்மேக்கிங் பயிற்சி வகுப்பு துவங்க உள்ளது.
மாதந்தோறும் மூன்றாவது வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இப்பயிற்சி வகுப்பு நடைபெறும்.இது குறித்து, கல்லுாரியின் பகுதி நேர பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் மணியன் கூறியதாவது:திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறையில் வேலைவாய்ப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, அதிக எண்ணிக்கையில் டெய்லர்கள் தேவைப்படுகின்றனர்.
ஏற்றுமதியாளர்கள் சங்கம் மற்றும் நிப்ட்-டீ கல்லுாரி சார்பில் ஏற்கனவே, பகுதி நேர ஆடை உற்பத்தி பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில், ஆடை உற்பத்தியின் அடிப்படை நுணுக்கங்களை அனைவரும் கற்றுக்கொள்ளும் வகையில், தையல் மற்றும் பேட்டர்ன் மேக்கிங் இரண்டு நாள் இலவச பயிற்சி வகுப்பு துவங்க உள்ளது. இப்பயிற்சி பெறுவதன்மூலம், புதியவர்களுக்கு ஆடை உற்பத்தி துறை மீதான ஆர்வம் பெருகும்; அடுத்தடுத்த பயிற்சிகள் பெற்று, திறன்மிக்க தொழிலாளராக மாறிவிடுவர்.ஒரு பிரிவுக்கு 25 பேர் வீதம், இரண்டு நாட்கள் பயிற்சி அளிக்கப்படும்.
திருப்பூர் பின்னலாடை துறையின் தொழிலாளர் தேவையை கருத்தில் கொண்டு, இலவச பயிற்சி வகுப்புகளை தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளோம். பயிற்சியில் சேர விரும்புவோர், 95979 14182 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என கல்லுாரி நிர்வாகம் அறிவித்துள்ளது.