கவுண்டம்பாளையத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகத்தில் ‘குரூப்-2’ தேர்வுக்கான இலவச பயிற்சி செப்., 10ம் தேதி வரை நடக்கிறது.
இதை தேர்வு எழுதுவோர் பயன்படுத்திக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால், 2,322 காலி பணியிடங்களை நிரப்பும் வகையில் ‘குரூப்-2’ தேர்வுக்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியிடப்பட்டது.
செப்., 14ம் தேதி தேர்வு நடக்கும் நிலையில், இதில் பங்கேற்பவர்களுக்கு கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு அலுவலகத்தில் கடந்த, 15ம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்பு துவக்கப்பட்டுள்ளது.காலை, 10.00 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடக்கும் பயிற்சி வகுப்பில், இந்திய அரசியலமைப்பு, வரலாறு, புவியியல், கணிதம், பொதுத்தமிழ், அறிவியல் உட்பட எட்டு வகையான பாடப்பிரிவுகளில் கடந்த காலங்களில் இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களை கொண்டு சிறப்பு பயிற்சி மற்றும் பாடப் குறிப்புகள் வழங்கப்படுகின்றன.
இது தவிர, போட்டி தேர்வுகளுக்காக அமைக்கப்பட்டுள்ள நூலகத்தில், 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதையும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் படித்து குறிப்பெடுத்துக் கொள்ளலாம். இந்த பயிற்சி வகுப்பில் இதுவரை, 75 பேர் இணைந்து பயிற்சி பெற்று வருகின்றனர்.
பயிற்சி வகுப்பு செப்., 10ம் தேதி வரை தொடர்ந்து நடக்கிறது.விருப்பமுள்ளவர்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம் என, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், விபரங்களுக்கு 94990 55937 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.