மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்ட அளவில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைகேட்பு கூட்டம் நடந்தது.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்தராமகுமார் தலைமை வகித்தார். அதில், திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ் பேசியதாவது:
மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டம் 2016ன் படி, அரசு வேலை வாய்ப்பில் நான்கு சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.கண்பார்வை இல்லாதோர், காது கேளாதோர், இயக்க குறைபாடுள்ளோர், இதர மாற்றுத்திறனாளிகளுக்கு, தலா ஒரு சதவீதம் என்கிற அடிப்படையில், ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.மாற்றுத்திறனாளிகள் தங்கள் கல்வித்தகுதி எதுவாக இருந்தாலும், படிக்கவே இல்லையென்றாலும் கூட அரசுப்பணிக்காக, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.மாற்றுத்திறனாளிகள் ஒரு முறை மட்டும் பதிவு செய்தால் போதும். மூன்று ஆண்டுக்கு ஒருமுறை பதிவு புதுப்பிக்க வேண்டிய அவசியமில்லை.
டி.என்.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி., போன்ற பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.போட்டித்தேர்வில் பங்கேற்க விரும்பும் மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்கலாம்.
நேரடி பயிற்சி வகுப்புக்கு தினமும் வந்து செல்வது சிரமமாக உள்ளதாக சிலர் தெரிவித்தனர்.இதனால் போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை ஆன்லைனில் நடத்துவதற்கான கட்டமைப்பு வசதிகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.போட்டித்தேர்வில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகள், பயிற்சி வகுப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.