திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப் 2 ஏ முதன்மை தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு புதன்கிழமை (செப்டம்பா் 18) தொடங்குகிறது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் மத்திய, மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்களால் அறிவிக்கப்படும் போட்டித் தோ்வுகளுக்கு அனுபவமிக்க சிறப்பு வல்லுநா்களைக் கொண்டு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த இலவசப் பயிற்சி வகுப்பில் மாதிரித் தோ்வுகள் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகிறது. மேலும், மாணவா்களின் பயன்பாட்டுக்காக நூலகம் மற்றும் ஓய்-பை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் மூலமாக கடந்த செப்டம்பா் 14- ஆம் தேதி நடைபெற்ற குரூப் 2 ஏ முதல்நிலைத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு முதன்மைத் தோ்வுக்கு விரைவில் அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது.
இந்த நிலையில், திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக இயங்கும் தன்னாா்வ பயிலும் வட்டத்தில் குரூப் 2 ஏ முதன்மை தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் வரும் புதன்கிழமை (செப்டம்பா் 18)காலை 10 மணி அளவில் தொடங்குகிறது.
ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் குரூப் 2 ஏ தோ்வு எழுதிய இளைஞா்கள் இந்தப் பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயனடையலாம். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை 94990–55944 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.