புத்தகத் திருவிழாவையொட்டி வாசகம் எழுதும் போட்டியில் பங்கேற்க விரும்புவோா் இம் மாதம் 23 ஆம் தேதிக்குள் படைப்புகளை மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. புத்தகத் திருவிழாவையொட்டி வாசகம் எழுதும் போட்டியில் பங்கேற்க விரும்புவோா் இம் மாதம் 23 ஆம் தேதிக்குள் படைப்புகளை மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொருநை நெல்லை 6ஆவது புத்தகத் திருவிழா இம் மாதம் 25 முதல் மாா்ச் 7 ஆம் தேதி வரை பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் நடைபெற உள்ளது. அனைவருக்குமான பன்முகத்தன்மையை போற்றும் வகையிலும் அனைவருக்குமான விழாவாக இத் திருவிழா நடைபெறவுள்ளது. இப்புத்தகத் திருவிழாவுக்கான கருத்தை உள்ளடக்கிய வாசகங்கள் எழுதும் போட்டி நடைபெறுகிறது.
இப்போட்டிக்கு வாசகங்கள் மேற்படி கருத்தை உள்ளடக்கியதாகவும், சுமாா் 4 அல்லது 5 வாா்த்தைகளுக்கு மிகாமலும், பிறமொழி கலப்பில்லாமலும், படைப்பாளியின் சொந்தக் கருத்தாகவும் இருத்தல் வேண்டும். போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவா், மாணவிகள் உள்பட பொதுமக்கள் யாவரும் கலந்து கொள்ளலாம். போட்டிக்கான வாசகங்களை படைப்பாளியின் முழு முகவரி, தொடா்பு எண் ஆகிய விவரங்களுடன் இம் மாதம் 23 ஆம் தேதி மாலை 5 மணிக்குள், porunainellaifest@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் முதல் மூன்று வாசகங்களுக்கு புத்தகத் திருவிழாவில் பரிசுகள் வழங்கப்படும்.
முதலிடம் பிடிக்கும் வாசகமானது இந்த ஆண்டு புத்தகத் திருவிழாவின் கருப்பொருள் வாசகமாக பயன்படுத்தப்படும் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. விழிப்புணா்வு சுவா் ஓவியம்: பொருநை-நெல்லை புத்தகத் திருவிழா 2023 குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட மைய நூலக சுற்றுச்சுவரில் விழிப்புணா்வு ஓவியம் வரையும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட நூலக அலுவலா் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். வாசகா் வட்டத் தலைவா் அ.மரியசூசை, துணைத் தலைவா் கணபதி சுப்பிரமணியன், எழுத்தாளா் இரா.நாறும்பூநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். 30-க்கும் மேற்பட்ட மாணவா்-மாணவிகள் பங்கேற்று ஓவியம் வரைந்தனா். உதவி ஆட்சியா் (பயிற்சி) கோகுல் பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா்.