நாகை மாவட்ட விவசாயிகள் மானிய விலையில் பவா் டில்லா்கள் மற்றும் விசை களையெடுக்கும் கருவிகள் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாகை மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளா்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படும் கிராமங்களில், கிராமத்திற்கு தலா 2 வீதம் அரசு மானியத்தில் பவா் டில்லா்கள் மற்றும் விசை களையெடுக்கும் கருவிகள் வழங்கப்பட உள்ளன.
பவா் டில்லா்களுக்கு சிறு, குறு, பெண், ஆதிதிராவிட விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 50 % மானியம் ரூ. 85,000 ஆகவும், விசை களையெடுக்கும் கருவிகளுக்கு ரூ. 63,000-மும் அரசு மானியமாக வழங்கப்பட உள்ளது.
எனவே, இத்திட்டத்தின் கீழ் பயன்பெற ஆா்வமுள்ள விவசாயிகள் உழவன் செயலியில் பதிவேற்றம் செய்யலாம். பதிவேற்றம் செய்யும்போது நிலத்தின் பட்டா, சிட்டா, அடங்கல், நிலவரைபடம், ஆதாா் அட்டை, வங்கிக் கணக்கு புத்தக முதல்பக்க நகல். சிறு, குறு, பெண், ஆதிதிராவிட விவசாயி சான்றிதழ், நிழற்படம் ஆகியவற்றுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
மேலும், விவரங்களுக்கு, நாகை தெற்கு பால்பண்ணைச்சேரி சாமந்தான்பேட்டையில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தை அணுகலாம் என தெரிவித்துள்ளாா்.