‘திறன் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு திட்டத்தில், விருப்பத்துக்கு ஏற்ற தொழில் பயிற்சியை தேர்வு செய்து பயன் பெறலாம்’ என, நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:மத்திய அரசின், ஊரக வளர்ச்சித் துறையில் செயல்படுத்தப்படும், ஊரக வாழ்வாதார இயக்கம், மத்திய மற்றும் மாநில அரசின், 60:40 என்ற நிதி விகிதாசார அடிப்படையில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் என்ற திட்டமாக செயல் படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டத்தில், கிராமப்புறங்களை சேர்ந்த, 18 முதல், 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கு, தொழில் சார்ந்த திறன் பயிற்சி வழங்கி, தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி, வாழ்வாதார நிலையை மேம்பாடு அடையும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இப்பயிற்சி திட்டத்தில், சுகாதார பராமரிப்பு, ஆயத்த ஆடை வடிவமைப்பு, சுற்றுலா, விருந்தோம்பல், கட்டுமானத் துறை, சோலார் பேனல் பொருத்துதல், ஏ.சி., மெக்கானிக், டிராக்டர், பழுது நீக்குதல், அழகு கலை, உணவு தயாரித்தல் போன்ற, 120-ம் மேற்பட்ட தொழில் பிரிவுகளில் பயிற்சி வழங்கப்படுகின்றன.
இத்திட்டத்தில் பயிற்சி பெற விரும்பும் கிராமப்புறங்களை சேர்ந்த, 18 முதல், 35 வரை உள்ள படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் (ஆண், பெண்), பஞ்சாயத்துகளிலும் செயல்படும் கிராம வறுமை ஒழிப்பு சங்கம், வட்டார இயக்க மேலாண் அலுவலகம் அல்லது கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தில் அணுகி, தகுதி மற்றும் விருப்பத்துக்கு ஏற்ப தொழில் பயிற்சியை தேர்வு செய்து பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.