டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளராகவும் உள்ள உலகின் நம்பர் 1 பணக்காரர் எலான் மஸ்க், தனது நிறுவனத்தில் நேர்காணலின் போது பங்கேற்கும் நபர்கள் தன்னிடம் பொய் சொல்கிறார்களா என்பதை கண்டுபிடிக்க ஒரு சில ட்ரிக்ஸை கடைபிடிக்கிறாராம். சி.என்.பி.சி வெளியிட்ட அறிக்கையின்படி, மஸ்க் இன்டெர்வியூ நடத்தும் நபர்களிடம் ஒரே ஒரு கேள்வியை கேட்பாராம். அதன் மூலம் அவர்கள் பொய் சொல்கிறார்களா இல்லையா என்பதை தீர்மானிப்பார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில், மஸ்க் தனது நிறுவனத்தில் பணிபுரிய எந்த மாதிரியான ஊழியர்கள் தேவை என்பதையும் அவர்களிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறார் என்பதையும் வெளிப்படையாக கூறுவார். மேலும் அவர் ஒரு போதும் தன்னிடம் பணிபுரியும் நபர்கள் சிறந்த பட்டதாரிகளாக இருக்க வேண்டும் என்று கூறியதில்லை. எனது நிறுவனத்தில் பணிபுரியும் செயற்கை நுண்ணறிவு (AI) குழுவின் உறுப்பினர்கள் பிஎச்டி பட்டம் அல்லது உயர்நிலைப் பள்ளி பட்டம் பெற்றிருந்தாலும் நான் உண்மையில் கவலைப்படவில்லை என்று எலான் மஸ்க் ஏற்கனவே கூறியிருந்தார்.
மேலும், AI பற்றிய ஆழமான புரிதலுடன் இருக்கும் பணியாளர்களை விரும்புவதாக அவர் தெரிவித்திருந்தார். அவரை பொறுத்தவரை ஒருவருக்கு பட்டம் என்பது அவசியமில்லை. மேலும் நிறுவனத்தில் வேலை பார்க்கும் AI குழு நேரடியாக மஸ்க்கிற்கு அறிக்கையை சமர்பிக்கிறது. இது தவிர்த்து வேலைக்கு விண்ணப்பங்கள் மற்றும் நேர்காணல்களுக்கு வரும்போது, பலர் பொய் சொல்கிறார்கள், மற்றவர்கள் சில உண்மைகளை அழகுபடுத்த முனைகிறார்கள். சி.என்.பி.சி வெளியிட்ட மற்றொரு அறிக்கையின் படி, 40 வயதிற்குட்பட்டவர்களில் 26% பேர் தங்கள் விண்ணப்பங்களில் பொய்யான தகவல்கள் இருப்பதை ஒப்புக் கொண்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.
ஆனால் தனது ஒரே ஒரு கேள்வியால் நேர்காணலுக்கு வரும் நபர்களில் பொய் சொல்பவர்களை தவிர்த்து உண்மை சொல்பவர்களை எளிதில் தேர்வு செய்ய முடியும் என எலான் மஸ்க் நம்பிக்கை வைத்துள்ளார் . இது குறித்து கடந்த 2017 ஆம் ஆண்டில் உலக அரசாங்க உச்சி மாநாட்டில் பேசிய மஸ்க், இந்த குறிப்பிட்ட கேள்வியை அவர் பணியமர்த்தும் அனைத்து ஊழியர்களிடமும் கேட்பேன் என்று கூறினார். அந்த கேள்வி, “நீங்கள் பணிபுரிந்த இடத்தில் மிகவும் கடினமான சில சிக்கல்களைப் பற்றியும் அவற்றை எவ்வாறு தீர்த்தீர்கள் என்பதையும் என்னிடம் சொல்லுங்கள்.” என்பது தான். இது ஒரு பெரிய தந்திரம் நிறைந்த கேள்வி இல்லையென்றாலும் அதன் லாஜிக் மிகவும் எளிதானது என்று மஸ்க் கூறினார்.
ஒரு நபர் பணியில் தான் சந்தித்த சில கடினமான பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டிருந்தால் அவர்களால் அதனை ஒரு நிமிடத்தில் விவரிக்க முடியும். அதன் படிப்படியான செயல்முறையை நேர்காணலில் தெளிவாக கூற முடியும். அதுவே பொய் சொல்பவர்கள் மஸ்க்கைக் கவரும் பொருட்டு கற்பனை விஷயங்களை உருவாக்கும் பட்சத்தில் அவர்களால் தீர்வை எட்ட முடியாது. அதன் மூலம் வேலைக்காக பொய் சொல்பவர்களை மஸ்க் எளிதில் கண்டுபிடித்து விடுவார் என கூறப்படுகிறது.மேலும், தி கன்சர்வேஷனில் வெளியிட்ட ஒரு கட்டுரையின் படி, மஸ்கின் இந்த ட்ரிக் உண்மையில் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.உண்மையைச் சொல்லும் நபர்களை காட்டிலும், பொய் சொல்பவர்கள் சற்று வித்தியாசமாக நடந்து கொள்ள வாய்ப்புள்ளது என்று ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு நபர் உண்மையைச் சொல்கிறாரா அல்லது பொய் சொல்கிறாரா என்பதைத் தீர்மானிக்க நேர்காணலுக்கு இந்த கேள்வி உதவலாம். உண்மையைச் சொல்லும் ஒருவர், அவர்கள் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க ஒரு நிமிடத்தில் அனைத்து விவரங்களையும் வழங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதையே ஒருவர் கற்பனையாக உருவாகும் பட்சத்தில் கடினம் தான்.