டி.எல்.எட்., என்ற தொடக்க கல்வி டிப்ளமா படிப்புக்கான தேர்வுக்கு, வரும் 28ம் தேதி முதல், தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என, தேர்வுத்துறை அறிவித்து உள்ளது.
இதுகுறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:டி.எல்.எட்., படிப்புக்கு ஆகஸ்ட்டில் தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வர்கள், www.dge.tn.gov.in/என்ற இணையதளம் வழியே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள், தாங்கள்ஏற்கனவே தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து வழங்க வேண்டும்.
தேர்வர்கள் தாங்கள் வசிக்கும் மாவட்டத்தின் அருகில் உள்ள, மாவட்ட ஆசிரியர் கல்வியியல் மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வழியே தேர்வு கட்டணம் செலுத்தி, ‘வெப் கேமரா’வில் புகைப்படம் எடுத்து விண்ணப்பிக்க வேண்டும்.வரும், 28ம் தேதி முதல், ஜூலை 7 வரை, காலை 10:00 மணி முதல் 5:45 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
இந்த கால அவகாசத்தில் விண்ணப்பிக்க தவறுவோர், ஜூலை 8, 9ம் தேதிகளில், கூடுதலாக 1,000 ரூபாய் கட்டணம் செலுத்தி, ‘தத்கல்’ திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.கூடுதல் விபரங்களை மேலே குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.